முழு ஈடுபாட்டோடு படித்தால் அரசுத்துறை வேலை வாய்ப்பு பெறலாம்: கலெக்டர்
அணியாபுரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாமை, கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், வானம் வசப்படும் என்ற தலைப்பில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
அரசு பள்ளி மாணவ, மாணவிகள், போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில், தமிழக அரசு, வானம் வசப்படும் என்ற தலைப்பில், பயிற்சி முகாமை துவக்கியுள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளில் எத்தகைய தயக்கமும் இன்றி, அரசுத்துறை வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள், இந்த முகாமைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் இலக்கை அடைந்திட வேண்டும். கல்விக்கு பெற்றோரின் பொருளாதார நிலை ஒரு தடையல்ல என்பதை நீங்கள் உணர்ந்து, உங்களது கனவை நனவாக்கிட வேண்டும்.
மாணவ, மாணவிகள் தங்களது முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் செலுத்த வேண்டும். அப்போதுதான் உங்கள் கனவை நிறைவேற்ற முடியும். மாணவ மாணவிகள் தங்களது ஒரே குறிக்கோள், படிப்பு மட்டுமே என்று மிகுந்த கவனத்துடன் படித்து தங்களது இலக்கை அடைய வேண்டும்.
மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான முகாம், வரும் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாமிற்கு, நாமக்கல், திருச்செங்கோடு பள்ளி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவர்கள், 74 மாணவிகள் என மொத்தம் 104 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், கந்தசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu