டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு: கலெக்டர் வேண்டுகோள்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு: கலெக்டர் வேண்டுகோள்
X

ஸ்ரேயாஸிங், நாமக்கல் கலெக்டர்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென நாமக்கல் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெங்கு காய்ச்சலை பரப்பும், ஏடீஸ் கொசுக்கள், நல்ல தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது. இந்த கொசுப்புழுக்கள் சாக்கடை, கழிவு நீர் கால்வாய்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யாது. ஏடீஸ் வகை கொசுக்கள், வீடுகளில் உள்ள தண்ணீர்சேமிக்கும் சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் புகுந்து முட்டையிடா வண்ணம், குடிநீர் பயன்படுத்தும் பொருட்களை, முழுமையாக மூடி வைக்க வேண்டும்.

மேலும், வீடுகளின் உள்ளே பிரிட்ஜ்கள் மற்றும் பூங்தொட்டிகளில், கொசுப்புழு உற்பத்தி ஆவதை தடுக்கும் வகையில், தினமும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டுக்கு வெளியே உள்ள பயன்படுத்தப்படாத ஆட்டு உரல், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், டம்ளர்கள் போன்றவற்றை, உடனுக்குடன் அப்புறப்படுத்தி, அவற்றில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாட்டில் இல்லாத வீடுகள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் அடிக்கடி சுத்தம் செய்து, உரிய கால அளவுகளில், தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், காய்ச்சல் கண்டவர்களின் பட்டியலை, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டெங்கு காய்ச்சலை பரிசோதிக்க, நவீன பரிசோதனை வசதிகளும், தேவையான மருந்து பொருட்களும், போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

பொதுமக்கள், சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் கூட தாமதிக்காமல், அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும். மேலும், பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால், மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை பெறுவதையும், போலி டாக்டரிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story