இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை: கலெக்டர் பேச்சு

நாமக்கல்லில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடுத்து, இச்சமுதாயத்தை வளமான, பாதுகாப்பான சமுதாயமாக உருவாக்க பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். பெண்களை இந்த திட்டத்தில் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணம், பெண்களிடம் ஒரு திட்டத்தை எடுத்துரைத்தால், அவர்களால் வீடு, கிராமம், தாலுகா மற்றும் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய தீய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
இது ஒரு தனிநபர் மட்டுமின்றி, ஒரு சமுதாய சீர்கேடாக மாறுகிறது. சங்கிலி தொடர் போல பல்வேறு நிலைகளில் சமுதாயத்திற்கு பாதிப்புப்பை ஏற்படுத்தும். இதனால் ஆண், பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நம் கடமை. நாமக்கல் மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை, கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., தனராசு, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கனகமாணிக்கம், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu