ஒரு டீ கடன் கொடுக்காததால் டீக்கடையில் போலீஸ் ரெய்டு ! போலி போன் கால் மூலம் போலீசாருக்கு தலைவலி !

பைல் படம்
நாமக்கல்,
ஒரு டீ கடனுக்கு தராததால், லாரி டிரைவர் போலீசுக்கு போன் செய்து, டீக்கடையில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக புகார் கூறினார். இதனால் போலீசார் டீக்கடைக்கு விரைந்து சென்று ரெய்டில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அவசர தேவைக்கு போலீஸாரின் உதவியைப் பெற 100 என்ற அவசர அழைப்பு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள், திருட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு கால் செய்தால் போதும். அடுத்த சில நொடிகளில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் விசாரணைக்கு வந்து விடுவார்கள். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த 100 அவசர அழைப்பு எண் பிரபலமாக உள்ளது.
ஆனால், ஒரு சில நேரங்களில் போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு போலி அழைப்புகளும் வந்து பாடாய்ப் படுத்தி விடுகிறது. சில மதுபிரியர்கள் போதையில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, போலியான தகவலை அளிப்பதால் போலீசாரின் உழைப்பும், நேரமும் விரயம் ஆகிறது. அப்படி ஒரு சம்பவம் நாமக்கல் அருகே நடைபெற்றுள்ளது.
கடந்த 7ம் தேதி, நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள நெ. 100க்கு, ஒரு கால் வந்துள்ளது. டூட்டியில் இருந்த போலீசார் போனை எடுத்ததும், எதிர்முனையில் பேசிய நபர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே மார்க்கெட் ரோட்டில், ராஜாராம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த டீக்கடையில் போதைப்பொருட்களை ரகசியமாக வைத்து விற்கிறார் என்று போனில் பேசியவர் தகவல் கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் எஸ்.பி ஆபீசில், சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சென்றது. உடனடியாக குறிப்பிட்ட அந்த டீக்கடைக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார், டீக்கடையில் தீவிர சோதனை நடத்தினர். சல்லடை போடாத குறையாக டீக்கடை முழுவதும் அலசி அலசி சோதனை நடத்தியும் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்த நபர் மீது சந்தேகம் திரும்பியது. இதையடுத்து போன் செய்து தகவல் கொடுத்த எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, உண்மை தெரியவந்தது.
அதாவது, அந்த டீக்கடைக்கு சில தினங்களுக்கு முன் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் (36) என்பவர் டீ குடிக்க சென்றுள்ளார். அவர் கையில் காசு இல்லாததால் கடனுக்கு டீ கேட்டு இருக்கிறார். ஆனால், டீக்கடை உரிமையாளர் ராஜாராம், கடனுக்கு எல்லாம் டீ கிடையாது, காசு கொடுத்தால் மட்டுமே டீ கிடைக்கும் என்று கூறி அவரை விரட்டி விட்டார்.
இதனால், கோபம் அடைந்த குமார், கடைக்காரர் ராஜாராம் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்த குமாருக்கு, அப்போதுதான் விபரீத ஐடியா ஒன்று தோன்றியிருக்கிறது. அந்த கடையில் போதைப்பொருள் விற்கிறார் என்று போலீசில் போட்டுக் கொடுத்துவிடலாம் எனக் கருதிய குமார், அவசர தொலைபேசி எண் 100-ஐ அழைத்து, அந்த டீக்கடையில், போதைப்பொருட்களை ரகசியமாக விற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளார். இதைக் கண்டுபிடித்த போலீசார், இது குறித்து, போலீசார் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதவாது: அவசர தொலைபேசி எண்ணான 100-ன் முக்கியத்துவம் அறியமால் இப்படி, பழிவாங்குவதற்காகவும், காமெடி செய்வதற்காகவும், போன் கால் செய்தால் எமெர்ஜென்சி அழைப்பு விடுத்தால் கூட போலீசார் மெத்தனம் காட்டும் சூழல் உருவாகும். எனவே அவசர தேவைக்கு மட்டுமே 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu