மோகனூர் நாவலடியான், மாரியம்மன் கோயில்களில் ரூ. 3.50 கோடி மதிப்பில் திருப்பணி செய்ய அனுமதி

பைல் படம்
நாமக்கல்,
மோகனூரில் பிரசித்திபெற்ற நாவலடியான் திருக்கோயில் உள்ளது. முற்காலத்தில் வணிகம் செய்ய சென்ற சில வணிகர்கள், மோகனூர் வழியாக சென்றபோது, இரவாகி விட்டதால் அங்கேயே தங்கினர். அப்போது, தாங்கள் வைத்திருந்த ஒரு கல்லை அங்கிருந்த நாவல் மரத்திற்கு அடியில் வைத்து தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது அந்த கல்லை எடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பண்ணசாமி, நானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அங்கேயே வைத்து கோயில் எழுப்பும்படி கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து கருப்பண்ணசாமியாக பாவித்து வணங்கினர்.
கருப்பண்ணசாமி நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால், நாவலடியான் என்றும், நாவலடி கருப்பண்ணசாமி என்றும் பெயர் பெற்றார். பிற்காலத்தில், இங்கு கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில், அனைத்து நாட்களிலும் விஷேச வழிபாடு நடத்தப்பட்டு சுவாமிக்கு அசைவப்படையம் வைப்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை, காளியம்மன், நாவலடி கருப்பண்ணசாமி அறங்காவலர் குழுவினர் பராமரித்து வருகின்றனர். நாவலடியான் கோயிலில் அன்னதானக் கூடம், மதில் சுவர், மாரியம்மன் கோயிலில், சுற்று சுவர் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறைக்கு, அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையின் போது, நாவலடியான் கோயிலில் ரூ. 1.50 கோடி மதிப்பில் புதிதாக அன்னதானக்கூடம் கட்டவும், ரூ. 1 கோடி மதிப்பில் மதில் சுவர் கட்டவும், மாரியம்மன் கோயிலில் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டவும், இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் கோயில் திருப்பணி துவங்கும் என அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu