சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்து அங்கி அலங்காரம்

சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு, முத்து அங்கி அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல்,
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு முத்து அங்கி அலங்காரம் நடைபெற்றது.
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியாகும். இந்த நாளை இந்துக்கள் ஒரு விரத நாளாக கொண்டுடுகின்றனர். இந்த விழாவை எமலோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரா பவுர்ணமியியை முன்னிட்டு, இன்று காலை 9 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள், சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. பின்னர், சுவாமிக்கு விலை உயர்ந்த முத்துக்களால் உருவாக்கப்பட்ட முத்து அங்கியைக் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பகல் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu