அரசுப்பள்ளிகளின் மின்சாரக் கட்டணத்தை தலைமை ஆசிரியர்கள் மூலம் கட்ட உத்தரவு :ஆசிரியர் மன்றம் கண்டனம்

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் மின்சாரக் கட்டணத்தை தலைமை ஆசிரியர்கள் சொந்தப்பணத்தில் கட்ட வேண்டும் என்ற உத்தரவுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிததுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் சங்கர், பொருளாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணத்தை, தமிழக அரசு மூலம் நேரிடையாக, மின்சார வாரியத்திற்கு செலுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் அறிவித்ததன் பேரில், இதுவரை பள்ளிகளின் மின்கட்டணம் அரசு மூலம் நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்களது பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், பள்ளி மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணத் தொகையை மின்சார வாரியத்திற்கு, சொந்த கைப்பணத்தில் இருந்து செலுத்தி விட்டு அதற்கான ரசீதுகளை வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வட்டாரக்கல்வி அலுவலர்களின் இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டிக்கிறது. பள்ளித் தலைமை ஆசிரியர்களை மின்சார பயன்பாட்டுக் கட்டணத் தொகையை சொந்த கைப்பணத்தில் இருந்து செலுத்துமாறு தெரிவித்து, கோடைக்காலத்தில் தேவையற்ற வகையில் தலைமை ஆசிரியர்களை அலைக்கழித்தும் வரும் தொடக்கக் கல்வித்துறையைக் கண்டித்து வரும் 25ம் தேதி மாலை 5.30 மணிக்கு நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu