நாமக்கல் சித்தர்மலைக்கு புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை; கலெக்டர் ஆய்வு

Siddhar Malai
Siddhar Malai
தமிழக முதல்வர் ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில், எம்எல்ஏக்கள், தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல், நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவிக்க வலியுறுத்தினார். அதனடிப்படையில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள, கோரிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நாமக்கல் நகராட்சியில், தற்போது 18 வார்டு பகுதிகளில் மொத்தம் 74 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இவற்றில் இருந்து வருகிற கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய, சேந்தமங்கலம் ரோட்டில், நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட மீதமுள்ள 21 வார்டு பகுதிகளுக்கு, 325 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கவும், நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்ட கூடுதல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி, கொசவம்பட்டி குப்பை சேகரிக்கும் நிலையத்தில் நிறுவப்பட உள்ள, விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டு பகுதிகளுக்கான, பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் - மோகனூர் ரோட்டில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்வதற்கு சரியான ரோடு வசதி இல்லை. இதனால் மலைக்குச் செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக சிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம், வழக்கத்தை விட பலமடங்கு அதிகரிக்கிறது. அந்நாட்களில், மலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில், எம்எல்ஏ ராமலிங்கத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து பக்தர்களின் நலன்கருதி, சிவன் கோவில், சித்தர்மலைக்கு புதிய தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, சித்தர்மலைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக, கரடு முரடான மலைப்பகுதியில் சென்று அங்குள்ள இடங்களைப் பார்வையிட்டு, கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார். மலைப்பகுதியில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் சக்திவேல், பிடிஓக்கள் அருளாளன், ஜெயக்குமரன், நாமக்கல் நகராட்சி பொறியாளர் சுகுமார், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu