நாமக்கல்லை முன்னணி ஏற்றுமதி மாவட்டமாக உயர்த்திட வேண்டும்: கலெக்டர்

நாமக்கல்லை முன்னணி ஏற்றுமதி மாவட்டமாக உயர்த்திட வேண்டும்: கலெக்டர்
X

நாமக்கல்லில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார். அருகில் மாவட்டதொழில் மைய பொது மேலாளர் ராசு, எம்எஸ்எம்இ தலைவர் இளங்கோ ஆகியோர்.

நாமக்கல் மாவட்டத்தை தமிழகத்தில் முன்னணி ஏற்றுமதி மாவட்டமாக உயர்த்திட பாடுபட வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 22ம் தேதி சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்திட வேண்டும் என்று, அதற்கான தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையினை வெளியிட்டார்கள். பருத்தி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் 1 சதவீத சந்தை நுழைவு வரியை நீக்கியதால் காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பஞ்சுக்கிடங்குகள் அமைத்திட முன்வந்துள்ளது. இக்காரணத்தால் ஜவுளித்தொழிலில் முன்னணி மாவட்டமாக உள்ள நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளித்தொழில் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல்லில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம், ஏற்றுமதியாளர் சங்கமம் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர். வேளாண் விளைபொருட்கள் மற்றும் ஏனைய உற்பத்தி தொழில்கூடங்கள் அதிகம் உள்ளன. தொழில் முனைவோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவில் மட்டுமல்லாது உலக சந்தைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகத்தான் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதியின் மூலம்தான் ஒருநாடு வளர்ந்த நாடாக உருவாக முடியும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எளிதில் வெளிநாடுகளுக்கு, அவர்களுக்கு தேவையான வடிவமைப்பில் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்ப முடியும். இதற்கான ஏற்றுமதி லைசென்ஸ் பெறுதல், தரக்கட்டுப்பாட்டு சான்றுகளை பெறுதல், வங்கிக்கடனுதவி பெறுதல், அனுபவம் வாய்ந்த ஏற்றுமதியாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை இக்கருத்தரங்கின் மூலம் தொழில்முனைவோருக்கு கிடைக்கும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முட்டையும், வெப்படைப் பகுதியிலுள்ள நூற்பாலைகள் மூலமாக விஸ்கோஸ் நூலிழையும், ஏளுர், பெரியமணலி, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிற துண்டு, போர்வை போன்ற ஜவுளிப் பொருட்களும், பரமத்தி வேலூர் பகுதியிலிருந்து மெருகூட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்படாத கிரானைட் கற்களும், திருச்செங்கோடு பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரங்கள் ஆகியவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னணி தொழில் மாவட்டமாக விளங்குவதோடு மட்டுமின்றி, முன்னணி ஏற்றுமதி மாவட்டமாக உயர்த்திட அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்தரங்கில் கொல்லிமலை பகுதியிலிருந்து பச்சை மிளகு, விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஏற்றுமதி சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. உழவர் உற்பத்தி நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற சிறுதானிய வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஏற்றுமதி நிறுவனமான அபி எக் ட்ரேடர்ஸ் இயக்குநர் பன்னீர்செல்வம், ஆல்ஃபா க்ளோபல் எக்ஸ்போர்ட் நிறுவன இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் ஏற்றுமதி குறித்து விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராசு, உதவிப் பொறியாளர் ராமகிருஷ்ணசாமி, நாமக்கல் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத்தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!