நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: காணொளியில் கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து வீடியோ கான்பரன்சிங்மூலமாக கலந்துகொண்டு கலெக்டரிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிய இயல்பு மழை அளவு 407.88 மி.மீ ஆகும். தற்போது வரை 472.7 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் அதிகமாக 64.88 மி.மீ மழை அளவு பெறப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நெல் 761 எக்டர், சிறுதானியங்கள் 31,212 எக்டர், பயறு வகைகள் 5,589 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 29,162 எக்டர், பருத்தி 1,381 எக்டர் மற்றும் கரும்பு 5,030 எக்டர் என மொத்தம் 73,135 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 2016-17 முதல் 2020-2021 வரை பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் 3,70,215 விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்துள்ளனர். இதில் 1,47,277 விவசாயிகளுக்கு ரூ.160.90 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 85,817 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக சுழற்சி முறையில் 233 விவசாயிகள் 51.163 மெ.டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.15.77 லட்சம் மதிப்பில் விற்பனை செய்து வருகின்றனர். காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பம் அளித்து அடையாள அட்டை பெற்று பயன்பெறலாம் என கூறினார்.
கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்ரமணியம், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu