கொல்லிமலையில் வனத்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடை சுற்றுலா மற்றும் தங்கும் விடுதி

கொல்லிமலையில் வனத்துறை சார்பில் குறைந்த    கட்டணத்தில் கோடை சுற்றுலா மற்றும் தங்கும் விடுதி
X

பைல் படம் 

கொல்லிமலையில் வனத்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில், கோடை சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்,

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இந்த மலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக, கடல் மட்டத்திலிருந்து, 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, நாமக்கல் நகரில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ளது. இம்மலைப்பகுதி, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகளுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள அரப்பலீஸ்வரர் கோயில், தோட்டக்கலைத்துறை பண்ணை, மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.

சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இக்கோடை காலத்தை இயற்கை உடன் இணைந்து கொண்டாட, மாவட்ட நிர்வாகம் சார்பில், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து, இன்று (மே, 11) முதல், வரும், ஜூன் 1 வரை, அனைத்து நாட்களிலும், சிறப்பு சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நபர் ஒருவருக்கு, பயணக் கட்டணம் மட்டும் ரூ. 300 ஆகும். பயணக் கட்டணம், மதிய உணவு, மற்றும் மாலை சிற்றுண்டியுடன் ரூ. 450 செலுத்தினால், ஒரு நாள் சுற்றுலா சிறப்பு வாகனம் மூலம் கொல்லிமலை பகுதியில் முக்கிய இடங்களைப் பார்வையிடலாம். இச்சிறப்பு சுற்றுலா திட்டத்தின் பயணங்கள், காலை 8 மணிக்கு செம்மேடு பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில், பழங்குடியினர் நலச்சந்தை, கொல்லிமலை இயற்கை அங்காடி, சீக்கு பாறை வியூ பாயிண்ட், சேலூர் வியூ பாயிண்ட், அரப்பலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட இடங்கள் பார்வையிட்டு, மாலை 5:40 மணிக்கு பயணம் நிறைவடையும். மேலும் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், கொல்லிமலையில் வனத்துறை மூலம் சோளக்காடு மற்றும் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி அருகில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் அறை முன்பதிவு செய்து குடும்பத்துடன் தங்கலாம். இதற்காக டிஎன்எப்டிசுற்றுலா.காம் என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த கோடை சுற்றுலாவை, கொல்லிமலையின் இயற்கை அழகுடன் கண்டுகளிக்க, வனத்துறை அலவலர்கள் ஈஸ்வர் 70923 11380, கோபி 97891 31707, புருசோத்தமன் 63833 24098, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் 73977 15684 ஆகியோர் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். பயண நாள் அன்று, செம்மேடு பஸ் ஸ்டாண்டில் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். கோடை விடுமுறையை, தங்கள் குழந்தைகளுடன் இயற்கையை ரசித்து சிறப்பாக கொண்டாட, இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story