ஊரடங்கு விதிமீறல்: நாமக்கல்லில் ஒரே வாரத்தில் 2,000 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல்லில், ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு நாமக்கல் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் அத்தியாவசிய தேவையின்றி பலரும், டூ வீலர்கள் மற்றும் கார்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அவ்வாறு செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, காரணங்களை கேட்டறிந்து, அவசியமின்றி சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு தொடர்கின்றனர். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த 24-ந் தேதி முதல் 31ம் தேதி வரை 7 நாட்களில், மாஸ்க் அணியாமல் சென்ற 4,250 பேரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 92 பேரிடம் இருந்து ரூ.46 ஆயிரமும், பொது இடங்களில் எச்சில் துப்பிய 33 பேரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 500-ம், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,393 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 500-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
அவ்வகையில், மொத்தமாக கடந்த 7 நாட்களில் ஊரடங்கை மீறியதாக 5,820 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.16 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இது தவிர கார், மோட்டார் சைக்கிள்கள் உள்பட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu