நாமக்கல் மாவட்டத்தில் நாபெட் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் துவக்கம்
பைல் படம்.
நாமக்கல் மாவ ட்டத்தில் நாபெட் நிறுவனம் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரைத் தேங்காயை, மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேங்காய்ப்பருப்பு விலை 1 கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில், அரவைக் கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.105.90க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.110.00க்கும், 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன், பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அனுகி பதிவு செய்துகொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu