மாநில கலைத்திருவிழாவில் பங்கேற்கும் நாமக்கல் மாவட்ட கலைக்குழு நிகழ்ச்சிகள் பதிவு துவக்கம்

மாநில அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நாமக்கல்லில் பதிவு செய்யப்பட்டன.
நாமக்கல்,
மாநில அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுவினருக்கான நிகழ்ச்சி பதிவு, நாமக்கல்லில் துவங்கியது.
தமிழக அரசு, கலை பண்பாட்டுத் துறை சார்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில், ‘சென்னை- நம்ம ஊரு திருவிழா’, 8 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, கோவை, தஞ்சை, வேலூர், சேலம், நெல்லை, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் ‘நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. அதேபோல், நடப்பு ஆண்டும், மேற்கண்ட 8 இடங்களில், கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், நேற்று தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், கலை நிகழ்ச்சிகள் பதிவு இன்று தொடங்கியது. ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லைசிவக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
நிகழ்ச்சியில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமியப் பாட்டு உளளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கலைக்குழுவினர் கலந்துகொண்டு தங்களின் திறமையை எடுத்துக்காட்டினர். நிகழ்ச்சியில், ஜவகர் சிறுவர் மன்ற கலை ஆசிரியர்கள் சரவணன், பாண்டியராஜன், வினோத்குமார், பிரவீன் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu