மாவட்டத்தில் 5.40 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 6.10 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பு: கலெக்டர்

திருச்செங்கோடு டிசிஎம்எஸ் கூட்டுறவு சங்கத்தில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 6.10 கோடி மதிப்பீட்டில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிசிஎம்எஸ் கூட்டுறவு சங்கத்தில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பொதுமக்கள் அனைவரும், பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 958 ரேஷன் கடைகளில் 5,40,033 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டம் விவசாயம் சார்ந்த பசுமையான மாவட்டம் ஆகும். உழவு தொழில் இம்மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நம் மாவட்டத்திலேயே கரும்பு அதிகளவில் விளைவிக்கப்பட்டு, பொங்கல் தொகுப்புக்காக கரும்பு விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ்பாபு, டிசிஎம்எஸ் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் யசோதாதேவி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்வராணி, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu