செயல்பட முடியாத கணவன், மகன்கள்: பரிதவித்த பெண்ணின் குடும்பத்திற்கு கலெக்டர் உதவி

செயல்பட முடியாத கணவன், மகன்கள்: பரிதவித்த பெண்ணின் குடும்பத்திற்கு கலெக்டர் உதவி
X

நாமக்கல் அருகே தந்தை, மகன் இருவரும் செயல்பட முடியாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் அருகே தந்தை மற்றும் மகன் செயல்பட முடியாமல் முடங்கியுள்ள குடும்பத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், செவந்திபட்டி ஊராட்சி, பனைமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நவநீதகிருஷ்ணன் (20). இரண்டாவது மகன் பரத் (14). பரத் செவ்வந்திப்பட்டி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த தம்பதியினரின் மூத்த மகன் நவநீதகிருஷ்ணன் பிறந்ததில் இருந்தே மூளை வளர்ச்சி குறைந்த நிலையில் காணப்பட்டார். இவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்றுவந்த போதும், குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லை. இவரது தாயார் இவரை பராமரித்து வருகிறார்.

இதனால் விவசாய கூலி வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. மகனை கவனிக்கவே அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. இவரது இரண்டாவது மகன் பரத் பல்வேறு உடல் நலக் குறைவு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தலையில் அடிபட்டது.

இந்நிலையில் தற்போது சில மாதங்களாக கை, கால்கள் செயலிழந்துவிட்டன. இதன் காரணமாக முடமாகி வீட்டிலேயே இருந்து வருகிறார். இவருக்கும் அனைத்து பராமரிப்பு பணிகளையும் மனைவி ராஜாத்தி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஏற்பட்டது. இவர்களுடைய நிலை குறித்து தகவல் கலெக்டரின் கவனத்திற்கு வரப்பெற்றது.

இதனையடுத்து கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேந்திரனின் குடும்பத்தினர் குறித்த முழுமையான விவரங்களை அரசு அலுவலர்கள் மூலம் பெற்று நடவடிக்கை மேற்கொண்டார்.

அதனடிப்படையில் பனைமரத்துப்பட்டியில் உள்ள ராஜேந்திரன் குடியிருக்கும் வீட்டிற்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல், நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா ஆகியோருடன் நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் வருவாய்த்துறையின் மூலம் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கான உத்தரவையும் மற்றும் அவரது மனைவி ராஜாத்திக்கு அவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்திற்கு வீட்டுமனை பட்டாவையும் வழங்கினார்.

மேலும், இவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவையும் கலெக்டர் வழங்கினார். மேலும், மூத்த மகனுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். இரண்டாவது மகனுக்கு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆரம்ப நிலை நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் கீழ் உடல் பரிசோதனை மேற்கொண்டு தேவையான சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

இதில் துணை இயக்குநர் (சுகாதாரம்) பிரபாகரன், மோகனூர் தாசில்தார் தங்கராசு, பிஆர்ஓ சீனிவாசன், ஏபிஆர்ஓக்கள் வடிவேல்,கோகுல், எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, எருமப்பட்டி பிடிஓக்கள் குணாளன், பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!