நாமக்கல் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு வருகை தந்த, சட்டசபை பொது கணக்குக்குழுவினர் அங்குள்ள, கால்நடைகளுக்கான நவீன ஸ்கேன் கருவியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங்.
Government Projects-நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்து அரசு திட்டப்பணிகளை பர்வையிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டசபை பொதுக் கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமையில், சட்டசபை செயலாளர் சீனிவாசன் அவர்கள், குழு உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) வேடசந்தூர் காந்திராஜன், காட்டுமன்னார் கோவில் சிந்தனைசெல்வன், ஓசூர் பிரகாஜ், திருவாரூர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, வீரபாண்டி ராஜமுத்து, பன்ருட்டி வேல்முருகன் ஆகியோர் ஆய்வுப்பணிக்காக வருகை தந்தனர்.
அக்குழுவினர், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களை பார்வையிட்டு அவர்களிடம் மருத்துவ சேவைகள் குறித்தும், மருத்துவ சேவையின் திருப்தி குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து மருந்து வழங்கும் பிரிவில்நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விவரங்கள் குறித்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகளின் விவரங்களை பதிவேடுகளில் பார்வையிட்டு இருப்பு விவரம் சரியாக உள்ளதா என்றும் சரிபார்த்தார்கள்.
வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டில் 69 விவசாயிகளின் நிலங்களில் 9,755 மரங்கள் நடப்பட்டுள்ளன. எர்ணாபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் நடப்பட்டுள்ள தேக்கு மரங்களை குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து, களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் குழுவினர் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது பள்ளியில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்தும், தேர்ச்சி விகிதம் குறித்தும், இடைநிற்றல் விவரங்கள், அதில் மாணவர், மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் அதை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர், காரைகுறிச்சி புதூர், தாத்தையங்கார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டனர்.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், கால்நடை மருத்துவ சிகிச்சை, இனப்பெருக்கம் மற்றும் மலடு நீக்கவியல், அறுவைசிகிச்சை ஆகியவற்றிற்கு தனித்தனி பிரிவுகளில் துறைசார் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு கால்நடைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசரசிகிச்சைப் பிரிவில் பாம்புகடி, பூச்சி மருந்தால் பாதிப்பு, கன்று ஈன இயாலாமை, கர்ப்பப்பை முறுக்கம், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல், எலும்பு முறிவு, வாகன விபத்தால் பாதிப்பு ஆகிய அவசர பிரச்சனைகளுக்கு முதலுதவி மற்றும் சிறப்பு அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிரிவுகளை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை பராமரிப்பு துறையின் கால்நடை ஆம்புலன்சை (1962) பார்வையிட்டு, கால்நடைகள் உள்ள இடத்திற்கே நேரில் சென்று அவசர சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆம்புலன்சில் ஹைட்ராலிக் லிப்ட் வசதி இயங்குகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் அதன் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உயர்கல்வி துறை, வணிக வரித்துறை, தொல்லியல் துறை, சிட்கோ, எரிசக்தி துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பொதுக்கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
பொதுமக்கள் வரியாக செலுத்தும் தொகையில் நடைபெறும், வளர்ச்சித்திட்ட பணிகள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக, திட்ட செயலாக்க நடைமுறைகளில், அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு, மக்களின் வரிப் பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்வது பொது கணக்கு குழுவின் பணியாகும். எனவே அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திட்ட பணிகளை அரசு வரைமுறைகளின் படி, சரியான முறையில் முழுமையாக குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் சட்டசபை இணை செயலாளர் தேன்மொழி, துணைச்செயலாளர் ரேவதி, டிஆர்ஓ (பொ) கவிதா, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu