அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வு நாளை துவக்கம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்  பணிக்கான போட்டி தேர்வு நாளை துவக்கம்
X

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நாளை துவக்கம். நாமக்கல்லில் 7 மையங்களில் நடைபெறுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை, 7 மையங்களில் இண்டர்நெட் மூலம் நடைபெறுகிறது. மொத்தம் 10,877 பேர் எழுத உள்ளனர். இதையொட்டி தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது;

பாலிடெக் விரிவுரையாளர் பணிக்கான டிஆர்பி தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்துதுறை அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு மையங்களில், தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகைகளில் தெரிவிக்க வேண்டும்.

திருச்செங்கோடு விவேகானந்தா இன்ஜினியரிங் கல்லூரி, கே.எஸ்.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் 2 மையங்கள், காளிப்பட்டி மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரி, குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனம், பாச்சல் ஞானமனி கல்வி நிறுவனம், வெண்ணந்தூர் நாமக்கல் டிஜிட்டல் ஹப் ஆகிய 7 தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர்கள் மூலம், இண்டர்நெட் வழியாக தேர்வுகள் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

8ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் பாடவாரியாக பேட்ச் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை தேர்வுகளுக்கு 7.30 மணிக்குள்ளும், மாலைத்தேர்வுகளுக்கு 12.30 மணிக்குள்ளும் ஆஜராக வேண்டும். தேர்வர்கள் தங்களுக்கான பேட்ச் எண் மற்றும் பாடப்பிரிவுகளை சரியாக தெரிந்து கொண்டு தங்களுக்கான தேர்வு மையத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக்கழக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் டிஆர்ஓ கதிரேசன், சிஇஓ மகேஸ்வரி, பிஆர்ஓ சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story