நாமக்கல்லில் இலக்கை தாண்டி கொடிநாள் நிதி வசூல்: கலெக்டர் பாராட்டு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நிதி அளித்து, கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடி நாள் விழாவில், கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு, போர் நடவடிக்கைகளின் போது உயிர் தியாகம் செய்த படைவீரரின் மனைவி மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், 2018-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதிக்கு அதிக நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
ஆண்டுதோறும் டிச.7ம் தேதி முப்படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. படைவீரரர்கள், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது, உறங்காமல் எதிரிகளிடம் இருந்து ஒவ்வொரு நொடியும் விழிப்புணர்வுடன் பாதுகாத்து வருகிறார்கள். இத்தகைய நிலையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். வீட்டுமனை பட்டா இல்லாத முன்னாள் படை வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா விரைந்து வழங்கப்படும்.
முன்னாள் படைவீரர்களின் நலத்திட்டங்களுக்காக திரட்டப்படும் கொடிநாள் வசூலில், 2020 ஆம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,69,18,000 என்ற இலக்கை தாண்டி, ரூ.2,15,66,000 வசூல் செய்யப்பட்டதற்காக அனைத்துதுறை அலுவலர்களுக்கும் பாராட்டை தெரிவிக்கின்றேன். 2021 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இலக்கான ரூ.2,03,02,000 என்ற இலக்கை தாண்டி, அதிக நிதி திரட்டி வழங்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓக்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் ராமசாமி, முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் கலைச்செல்வி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu