சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெற்கதிர், கடலைப் பயிர்களை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்படடி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. விவசாயிகள், நெற்கதிர் மற்றும் கடலை பயிரை கையில் ஏந்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
வளையபட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் வேண்டாம் என, கடந்த இரண்டரை ஆண்டுகளாக போராடி வருகின்றோம். மேலும், 111 முறை அறவழிப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதிகாரிகள் விளைநிலங்களை தரிசு என்று தவறான தகவல்களை அனுப்பி உள்ளதைக் கண்டித்து போராடி வருகின்றோம். சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்த தகவல்களை முதல்வருக்கு தெரியப்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்தினர் மறைக்கின்றனர். இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால், வரும் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஆளும் அரசுக்கு எதிராக விவசாயிகள் திரும்புவார்கள் என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu