கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X

மாநில தலைவர் வேலுச்சாமி.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து, வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழக முதல்வர் முன்கூட்டியே தண்ணீர் திறந்துள்ளார். விவசாயிகள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் போது, 50 சதவீதம் உரங்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர், அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. விவசாயிகள் விரும்பியபடி உரங்கள் வழங்குவதுடன், மீதம் உள்ள தொகையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்கினால், உற்பத்தி செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைள நீர்வளத்துறை, வருவாய்த்துறை மூலம் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து, தூர் வாரவேண்டும்.

தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 150 மட்டுமே வழங்கி, டன் ஒன்றுக்கு ரூ. 2,900 மட்டுமே விலையாக வழங்கப்படுகிறது. தற்போது, உற்பத்தி செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வெட்டுக்கூலியும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, 2022–23ம் அரவை பருவத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டர் ரூ. 60 வீதம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!