காவிரி - திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற குழு அமைப்பு: மாதேஸ்வரன் எம்.பி. தகவல்
நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன்.
காவிரி - திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற, ஆர்வமுள்ள அனைவரும் குழுவில் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பி. மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நமக்கல், சேலம், திருச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், காவிரி ஆற்றின் துணை நதியாக விளங்கி வரும் திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, ஏற்கனவே நடைபயணம், டூ வீலர் பேரணி, கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் சட்டசபையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்திட்டம் முழுமையான வெற்றி பெற ஈஸ்வரன் எம்எல்ஏ ஆலோசனைப்படி நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள சமூகத் தன்னார்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய ழுவை நியமிக்க கொமதேக முடிவு செய்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பவித்திரம் வரை சுமார் 132 கி.மீ. தூரம் இந்த திட்டத்தினால் பயன்பெற உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், சுமார் 50,000 ஏக்கர் வரை பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சுமார் 50 ஆண்டுகாலம் இத்திட்டத்திற்காக பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்பெறலாம். மேலும் இதன் மூலம் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, தாத்தையங்கார் பேட்டை உள்ளிட்ட பகுதிகள் நிரந்தரமாக பயனடையும்.
இவ்வளவு சிறப்பு மிக்க காவிரி - திருமணிமுத்து இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி நம் எதிர்கால சந்ததிகளுக்கு இயற்கையின் கொடையை முழுமையாக பெற்றுத்தர, தமிழக அரசுக்கு நாம் உதவும் வகையில், இத்திட்டத்தை நிறைவேற்ற, தன்னார்வாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, காவிரி - திருமணிமுத்தாறு மீட்புத் திட்டம் என்ற குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் 8111001999 என்ற மொபைல் போனை தொடர்பு கொள்ளலாம், மேலும் இந்த எண்ணில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து, தங்களின் முழு விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். விரைவில் தன்னார்வலர்கள் விபரங்கள் பெறப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். காவிரி - திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் இந்த குரூப்பில் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu