நாமக்கல் மாவட்ட மிகப்பெரிய தூசூர் ஏரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியா தூசூர் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அந்த ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நீர்னளத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 1,184.08 மில்லியன் கன அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு 553.93 மில்லியன் கன அடி ஆகும். இதன் மூலம் நேரடியாக பாசன வசதி பெறும் பாசன பரப்பு 3,318.47 ஹெக்டேர் ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் நீர் வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மின்னக்கல் ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, சேமூர் ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, மல்லசமுத்திரம் பெரிய ஏரி, பாலமேடு சின்ன ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, இலுப்புலி ஏரி, மாணிக்கம்பாளையம் ஏரி, ஏமப்பள்ளி ஏரி, தேவனாம்பாளையம் ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, வேட்டாம்பாடி ஏரி, செருக்கலை ஏரி, இடும்பன்குளம் ஏரி, சாரப்பள்ளி ஏரி, எருமப்பட்டி ஏரி, புதுக்குளம் ஏரி, வரகூர் ஏரி, துத்துக்குளம் ஏரி, பெரியகுளம் ஏரி, பொம்மசமுத்திரம் ஏரி, பாப்பான்குளம் ஏரி, செல்லிபாளையம் ஏரி, சிவநாயக்கன்பட்டி ஏரி, பழையபாளையம் ஏரி, கஸ்தூரிப்பட்டி ஏரி, திப்ரமாதேவி ஏரி, தூசூர் ஏரி ஆகிய 30 ஏரிகளில் துண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மேலும், பவித்திரம் ஏரியில் 75 சதவிகிதத்திற்கு மேல் நீர் நிரம்பி உள்ளது. அகரம் ஏரி, புதுக்குளம் ஏரி ஆகியவற்றில் 50 - 75 சதவிகிதம் வரை நீர் நிரம்பி உள்ளன. பொன்னார்குளம் ஏரியில் 25 சதவிகிதத்திற்கு மேல் 50 சதவிகிதத்திற்குள் நீர் நிரம்பி உள்ளது. மேலும், பேளுக்குறிச்சி ஏரி, செட்டிக்குளம் ஏரி, கோனேரிப்பட்டி ஏரி, ஆலத்தூர் ஏரி, வடுகம் ஏரி, ஆண்டபுரம் ஏரி, செவந்திப்பட்டி ஏரி ஆகியவற்றில் 25 சதவிகிதத்திற்கும் குறைவாக நீர் நிரம்பி உள்ளன.
தூசூர் ஏரியானது, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். சுமார் 350 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரியின் முழு கொள்ளளவு 66.69 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் 542.82 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசனம் பெறுகிறது. தற்போது தூசூர் ஏரி நிரம்பி உபரிநீர் வளையப்பட்டி வழியாக அரூர் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. அரூர் ஏரி விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேறிக்கொண்டிருக்கும் தூசூர் ஏரியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, என்.புதுப்பட்டி கிராமம் கோவிந்தம்பிள்ளை ஏரி, மோகனூர் தாலுக்கா பேட்டப்பாளையத்தில் குளம் சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu