ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் பட்டா வழங்குவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் பட்டா    வழங்குவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
X

ராசிபுரம் ஸ்ரீ தேவி தியேட்டரில், நாமக்கல் உமா கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம் தாலுகா, ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில், வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டாக்கள் ஏதுமின்றி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில் குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் குடியிருப்புகளுக்கு நாமக்கல் கலெக்டர் உமா, இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். ஆவணங்கள் சரியாக இருப்பின் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, நகர்ப்புற வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், விரைவில் பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக, ராசிபுரம் அருகில் உள்ள இம்மானுவேல் மாணவர்கள் விடுதியில் லைசென்ஸ் வழங்குவது குறித்தும், ராசிபுரத்தில் செயல்பட்டு வரும் சேக்ரட் ஹார்ட் மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள், மாணவியர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ராசிபுரம் ஸ்ரீ தேவி சினிமா தியேட்டரில் வருடாந்திர லைசென்ஸ் (சி ஃபார்ம்) புதுப்பித்தல் தொடர்பாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தியேட்டரில் வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை வசதிகள், இருக்கைகள் வசதி, திரை அளவு, ஒலி, ஒளி அளவுகள் மற்றும் தரம், தீயணைப்பு கருவிகள், அவரச கால வெளியேறும் வழி வசதிகள், கட்டண விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென திரையரங்க உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சி, கெஜகோம்மை மற்றும் கல்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வன எல்லை நிர்ணயம் செய்தல், காப்பு நிலமாக அறிவித்தல் ஆகியவை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story