பொதுமக்களை நேரில் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்: பாஜக மாநில து.தலைவர் துரைசாமி
நாமக்கல் 30வது வார்டு ஜெயநகர் பகுதியில் போட்டியிடம் பாஜக வேட்பாளர் அகிலனை ஆதரித்து, சட்டசபை முன்னாள் துணை சபநாயகரும் பாஜக மாநில துணைத்தலைவருமான துரைசாமி, வாக்களர்களிடம் தாமரை மலர் கொடுத்து வாக்கு சேகரித்தார். அருகில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி.
நாமக்கல் முனிசிபாலிட்டி 30வது வார்டு பாஜக வேட்பாளராக அகிலன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதராவக ஜெயநகர் பகுதியில் சட்டசபை முன்னாள் துணை சபாநாயகரும், பாஜக மாநில துணைத்தலைவருமான வி.பி துரைசாமி வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தாமரைப்பூ கொடுத்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் 520 வாக்குறுதிகளைக் கொடுத்து, தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 8 மாத ஆட்சியில் 7 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளார். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் நெல் கொள்முதல், நீட் தேர்வு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் தற்போது தமிழக அரசின் மீது பொதுமக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றனர். கடந்த மாதம் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தற்போது மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பஸ்கள், ரயில்கள், சினிமா தியேட்டர்கள், திருமண விழாக்கள் போன்ற அனைத்தும் 100 சதவீதம் இயங்கி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தினசரி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்களை நேரில் சந்திக்க பயந்துகொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய தயங்குகிறார்.
நீட் தேர்வு என்பது மத்தியில். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன், பார்லியில் கொண்டுவந்த சட்டம் என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதற்கு காந்திசெல்வன் உட்படயாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே நீட் தேர்வுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் மத்திய அரசு அதை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் 700 மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வராது என்பதால், மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
இந்தியாவில் சுமார் 140 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால், அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்து. சர்வதேச அளவில், இந்தியாவில் இந்நோய் தொற்றால் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தற்போது கொரோனாவைக் கண்டு நாம் யாரும் பயப்படுவதில்லை. இதற்கு காரணம் இந்திய பிரதமர் மோடிதான் என்று உலக நாடுகள் அனைத்தும் பாராட்டுகின்றன. தமிழகத்தில், அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தøல் சந்திப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து திராவிட கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல், நேர்மையான நிர்வாகம் நடைபெற மோடி தலைமையிலான பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று பொதுமக்கள் இந்த தேர்தலில் ஆதரவளிக்கத் தயாராகிவிட்டனர். எனவே எதிர்பார்ப்பிற்கும் மேலாக அதிக இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதியாகவிட்டது என்று அவர் கூறினார்.
முன்னதாக, வி.பி.துரைசாமி, நாமக்கல் 39வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சின்னுசாமிக்கு ஆதரவாக கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி சத்தியாபனு, மாவட்ட செயலாளர் லோகேந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu