கொல்லிமலை வனப்பகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பில் தடுப்பணைகள்: கலெக்டர் ஆய்வு

கொல்லிமலை வனப்பகுதியில் ரூ. 33 லட்சம்    மதிப்பில் தடுப்பணைகள்: கலெக்டர் ஆய்வு
X

கொல்லிமலையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை, நாமக்கல் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொல்லிமலையில் உள்ள வனப்பகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணைகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

பொதுப்பயன்பாடுகள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, வளர்ச்சிக்கான வளங்களை பெருக்கும் வகையில், வட்டார அளவிலான நிர்வாகங்களில், திறனை உருவாக்குவதும், பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது விரைவான வளர்ச்சியை அடைய அவற்றை திறம்பட பயன்படுத்துவது வளமிகு வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் வளமிகு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திட தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொல்லிமலை பைல்நாடு காப்பு காடு, வரகூர் காப்புகாடு, அடுக்கம் புதுக்கோம்பை காப்பு காடு, குண்டூர் காப்பு காடு, செல்லூர் காப்பு காடு ஆகிய பகுதிகளில் தலா ரூ. 3 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பில் 5 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பைல்நாடு காப்பு காடு, அடுக்கம் புதுக்கோம்பை காப்பு காடு, வரகூர் காப்புகாடு ஆகிய 3 பகுதிகளில் தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 இலட்சம் மதிப்பில் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. செல்லூர் காப்பு காடு பகுதியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தடுப்பணை தூர்வாரப்பட்டுள்ளது. காப்பு காடுகளில் தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர்க்குட்டைகளை, மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலையில், கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story