நாமக்கல்லில் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு : கலெக்டர்

நாமக்கல்லில் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு    வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு : கலெக்டர்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், தேசிய அளவில் வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம் (Vitamin A Prophylaxis Programme) 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. வைட்டமின் ஏ என்பது, கண்ணின் விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்ச்சத்து ஆகும். வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. சரும ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. தினசரி உணவில் தேவையான அளவு வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். வைட்டமின் ஏ குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இதனால் ஏற்படும் பார்வையிழ்பபை தடுப்பதற்காக, ஆண்டு தோறும் 6 மாத இடைவெளியில் 2 முறை குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. மொத்தம் 1,04,113 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி., மற்றும் 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி. திரவம் கிராம நகர சுகாதார நர்சுகள், அங்கன்வாடி பணியாளர், எஸ்எச்ஏ பணியாளர், இரண்டாம் ஆண்டு ஏஎன்எம் பயிற்சி மாணவிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் மூலம் அங்கன்வாடி மையங்களில் வைத்து வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும்.

மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும் முகாம்களில், வைட்டமின் ஏ திரவம் வழங்கி, குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இல்லாமல் தடுத்து, அதன் மூலம் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story