குதிரைப்பாதை வழியாக கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை: மலைவாழ் மக்கள் கோரிக்கை
குதிரைப்பாதை வழியாக கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை: மலைவாழ் மக்கள் கோரிக்கை
நாமக்கல்,
கொல்லிமலை சேலூர்நாடு குளிப்பட்டி முதல் எருமப்பட்டி வழியாக நாமக்கல் வரை, ஏற்கனவே உள்ள குதிரைப்பாதையை சீரமைத்து, மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து சேளூர்நாடு பஞ்சாயத்து தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ரங்கசாமி, கொல்லிமலை தாலுகா செயலாளர் தங்கராசு ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திரளான மலைவாழ் மக்கள் நாமக்கல் கலெக்டர் உமாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:.
கொல்லிமலை தாலுகா, சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு பகுதிகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 15 ஆயிரத்துக்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். போதுமான ரோடு வசதி இல்லாததால், மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யவேண்டியுள்ளது. மலைப்பகுதியில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்ட தலைநகரான நாமக்கல் வருவதற்கு சுமார் 90 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆபத்து, விபத்து பிரசவம், மாரடைப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லக்கூடிய வழியிலேயே மரணம் நிகழ்வது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
விவசாயிகள் விவசாய விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, தலையில் சுமையுடன் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நேர விரயம் ஏற்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் எருமப்பட்டி சமவெளி பகுதியில் இருந்து சேலூர் நாடு பகுதிக்கு வருவதற்காக குதிரைப்பாதை பயன்படுத்தப்பட்டது. சேலூர் நாடு மணப்பாறை சந்தையில் இருந்து குதிரை பாதைக்கு வருவதற்கு வெறும் 2 கி.மீ தூரமே உள்ளது. இப்பொழுது நீண்ட தூரம் பயணித்து சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை சொற்ப விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறிப்பாக அரப்பளீஸ்வரர் கோயில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ள பகுதி, குளிப்பட்டி குதிரைப்பாதையில் இருந்து வெறும் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சேலூர் நாடு குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வழியாக நாமக்கல் வருவதற்கு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைப்பாதையை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் 34 கி.மீ. தொலைவில் நாமக்கல்லை அடைய முடியும். இதனால் சுமார் 46 கி.மீ பயண தூரம் மீதமாகிறது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பொருள் மற்றும் நேர விரயமும் சேமிக்கப்படுகிறது.
இதனால் மலைவாழ் மக்கள் தங்கள் அன்றாட பணிகள் மற்றும் மருத்துவம், பிரசவம், விவசாய பொருட்கள் கொண்டு சென்று வர, அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றுவர மிகவும் எளிதாக அமையும். எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஏற்கனவே இருந்த குதிரைப்பாதையை தார் ரோடாக மாற்றியமைத்து, கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu