எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவின் சங்கீதா போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைரவாக பொறுப்பேற்ற சங்கீதாவுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவராக, ஒன்றிய அதிமுக செயலாளர் வரதராஜன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில், அந்த வார்டில் திமுக வெற்றிபெற்றது.
இதையொட்டி 15 உறுப்பினர்கள் கொண்டு எருமப்பட்டி ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த பூமதி, சுசீலா, லோகநாதன், சரண்யா, சகுந்தலா, சங்கீதா, விமலாதேவி, சாந்தி, திமுக வைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், மகாமுனி, கவுசல்யா, முத்துகிருஷ்ணன், முத்துகருப்பன், பாஜகவைச் சேர்ந்த துரைராஜூ, சுயேச்சை ராஜ்குமார் ஆகியோர் ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் 8 பேர், பாஜக 1, சுயேச்சை 1 என 10 பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுக தரப்பில் 5 பேரும் உறுப்பினராக இருந்தனர். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு 2 முறை பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தலை ஜனநாயக முறைப்படி உடனடியாக நடத்த வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் கோபிநாத், உதவி தேர்தல் அலுவலர் குணாளன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதிமுக சார்பில் சங்கீதா தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
திமுக உறுப்பினர்கள் யாரும் தேர்தலில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சங்கீதா போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் தலைவராக பொறுப்பேற்றார். அவருக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu