20 இடத்தில் தொடர் சங்கிலி பறிப்பு: குமாரபாளையத்தில் 10 இளைஞர்கள் கைது
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த கீதா (47) என்பவர், கடந்த அக். 29ம் தேதி காலை நடந்து சென்றபோது, மோட்டார் பைக்கிள் வந்த 3 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினைபறித்து சென்றனர்.
அதேபோல் கடந்த 30ம் தேதி மாலை வீட்டுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள், வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் 20 இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில், சென்னை தினேஷ்குமார் (31), சசிக்குமார் (23), மதுரை உசிலம்பட்டி கருப்பசாமி (22) ஆகிய 3 பேர், இந்த தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும், அவர்கள் புழல் சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்ததும், வழிப்பறி செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து, சென்னையில் மோட்டார் சைக்கிள் வாங்கி, கடந்த ஜூலை மாதம் முதல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து புறப்பட்டு சிதம்பரம், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், திண்டிவனம், அரூர், கும்பகோணம், உளுந்தூர்ப்பேட்டை, ஆத்தூர், சின்னசேலம், செஞ்சி, திருவண்ணாமலை, தண்டாரம்பேட்டை, வாலாஜா, ராணிப்பேட்டை, பள்ளிபாளையம், கரூர், நாமக்கல், மற்றும் வேட்டுவளம் உள்ளிட்ட 20 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொடர் சங்கிலி பறிப்பு திருடர்களை பிடிக்க நாமக்கல் எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், டி.எஸ்.பிக்கள் சுரேஷ், முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், வேலுதேவன், சந்திரகுமார், பாண்டியன் ஆகியோர் தலைமையில் சைபர் கிரைம் தனிப்படையினர், சிசிடிவி கேமரா ஆராயும் குழுவினருடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த, 3 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தினேஷ்குமார், சசிக்குமார், கருப்பசாமி என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டனர். வழிப்பறி செய்த நகைகளை, காரைக்காலை சேர்ந்த முருகேசன், செல்வம் மற்றும் திருவாரூரை சேர்ந்த சதீஷ் ஆகியோரிடம் கொடுத்துள்ளதையும் ஒப்புக்கொண்டனர்.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் பேரில், அவர்களுக்கு உதவியாக இருந்த, அருள், செல்வம், முருகேசன், மணி, சதீஷ், செல்லம்மாள் மற்றும் மதுரைவீரன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu