குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாட்ச்மேன் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாட்ச்மேன் உயிரிழப்பு
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாட்ச்மேன் உயிரிழந்தார்.

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாட்ச்மேன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காந்தி நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது 62.) இவர் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் தான் பணியாற்றும் இடம் அருகே அவர் நடந்துவந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரது சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை இவரது மகன் பாலாஜி, 43, தந்தையை காண, அவர் பணியாற்றும் இடம் அருகே வந்த போது, நடந்த விபரங்களை அருகில் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்து குற்றவாளியை கண்டுபிடுத்து தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

இளைஞர் கழுத்தை அறுத்து கொலை

பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனி பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை பின்புறம் பாலக்காடு என்ற பகுதியில் ஒரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் கொலையான நிலையில் இருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது சென்னை-கோவை செல்லும் ரயில்வே இரும்பு பாலம் அருகில், பயணியர் மாளிகை பின்புறப்பகுதியில், ஒரு இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டனர்.

சம்பவ இடத்தில் பள்ளிபாளையம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரயில்வே இரும்பு பால பகுதியில் ரத்த கரைகள் இருந்ததும், அந்த இடத்தில் இருந்து உடலை இழுத்து வந்து தற்போது சடலம் இருந்த பகுதியில் வீசப்பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் சம்பவ இடத்தில் கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் கிடைக்குமா என திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலையான இளைஞர் உடலை சோதனை செய்தபோது அவரது சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையின் அடிப்படையில், உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து, தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புறவழிச்சாலையில் பள்ளத்தில் விழுந்த கார்

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு பகலாக ஓடிக்கொண்டுள்ளது. சாலையின் ஓரம் அதிக இடங்களில் பள்ளம், மேடாக உள்ளது. இதனால் கனரக வாகனங்களுக்கு வழிவிட டூவீலர் ஓட்டுனர்கள் சாலையை விட்டு கீழே இறங்க முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

நேற்றுமுன்தினம் இரவு குமாரபாளையம் அருகே ரெட்டியார் டீக்கடை அருகே சாலையோரம் வெட்டப்பட்ட பள்ளத்தில் வேகமாக வந்த போர்டு கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் வந்த கார் ஓட்டுனர் மயக்க நிலையில் இருந்ததால், வழியில் சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச் அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புறவழிச்சாலையில் இந்த பள்ளங்கள் எதற்காக உள்ளன என்பது யாருக்கும் தெரியாத நிலையில் உள்ளது. கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால், அந்த பகுதியில் சாலையோர மரங்கள் தினமும் பொக்லின் மூலம் வெட்டப்பட்டு வருகிறது. ஆனால் நேற்றுமுன்தினம் விபத்து நடந்து கார் பள்ளத்தில் விழுந்த இடத்தில் எதற்காக பள்ளம் உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது. இங்கு சாலையோரம் பள்ளம் உள்ளது என்று எவ்வித சிக்னலும் இல்லை. தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இவ்வழியாக புதிதாக வருபவர்களுக்கு இங்கு பள்ளம் உள்ளது என்பது எப்படி தெரியும்? இரவு நேரங்களில் இது போன்ற இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிய தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை