குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காச நோய் ஒழிப்பு திட்டம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குமாரபாளையம் ஜி.ஹெச்., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., சாரணர் படை மாணவர்கள் இணைந்து, காச நோய் விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அனைவரும் காச நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி, காந்திபுரம், சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை, பெரந்தார்காடு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதி, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அருள்மணி, உள்பட பலர் பங்கேற்றனர்.

காசநோய் குறித்து டாக்டர் கூறுகையில், என்புருக்கி நோய் அல்லது காச நோய் என்பது மைக்கோபாக்டீரியா என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.

காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.

இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை.

இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.

நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் பரிசோதனை, உடல் நீர்மங்களின் நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக இந்த காசநோயே காணப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story