ஐயப்ப பக்தர்கள் போல் வேடமிட்டு ரூ.40 ஆயிரம் ஜவுளிகள் திருட்டு
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தனியார் காகித ஆலைக்கு செல்லும் சாலையில், தனியார் ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் செந்தில்குமார். ஜவுளி மொத்த வியாபாரம் மற்றும் பாத்திரங்கள், பெட்சீட்டுகள் உள்ளிட்ட பல்வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு ஐயப்ப பக்தர்கள் போல் கழுத்தில் கருப்பு, காவித்துண்டு கட்டிக்கொண்டு மூன்று பேர் கடைக்கு வந்துள்ளனர். கடையில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை ஜவுளிகளை பேரம் பேசி வாங்கியுள்ளனர். ஜவுளிகளை வாங்கியதற்கான பணத்தை கையில் கொடுப்பதற்கு பதிலாக கடை உரிமையாளரின் ஜிபே எண்ணிற்கு பணத்தை அனுப்பி விடுவதாக கூறி, அவரிடம் ஜிபே எண்ணை கேட்டுள்ளனர். அவர் ஜி பே என்னை தந்துவிட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, பணம் அனுப்பியது போன்ற ஒரு குறுஞ்செய்தியை அந்த நபர்கள் அவரிடம் காட்டி, பணத்தை அனுப்பி விட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் கடையின் உரிமையாளர், தனது செல்போனுக்கு பணம் வந்துள்ளதா என்பதை சரியாக கவனிக்காமல் அவர்கள் காட்டிய குறுஞ்செய்தி ரசீதை பார்த்துவிட்டு அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜவுளிகளை பார்சல் கட்டி அனுப்பி வைத்துவிட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தனது வங்கிக்கணக்கில் பணம் வந்துள்ளதா என்பதை பார்த்தபோது கணக்கில் வரவு வைக்கபடாதது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சுற்றுவட்டார பகுதி முழுவதும் அந்த நபர்கள் குறித்து விசாரித்தபோது அப்படிப்பட்ட நபர்களே இந்த பகுதியில் இல்லை என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கடையின் உரிமையாளர் செந்தில்குமார் கடை வியாபாரிகள் யாரும் இது போன்ற நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்ற தகவலுடன் சமூக வலைதளத்தில் அந்த நபர்கள் வந்து சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது..
ஐயப்ப பக்தர்கள் போல் வந்தவர்கள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜவுளிகளை நூதனமாக திருடிச் சென்றுள்ளது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். நூதண முறையில் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu