கூத்தாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக விழா
குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகவிழா நடைபெற்றது.
குமாரபாளையம் ஜி.ஹெச். பின்புறம், மகா கணபதி, முருகன் சுவாமி, மற்றும் கூத்தாண்டவர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை 06:00 யாக சாலை பூஜைகள், காலை 08:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. திருநங்கைகள் பெரும்பாலோர் பங்கேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூத்தாண்டவர் கோயில் குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:திருநங்கை என அழைக்கப்படும் அரவாணிகளின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைகின்ற ஒரு விழாவே கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக் கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தவிர விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் அருணாபுரம் ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை, சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் மற்றும் வானூர் வட்டம் தைலாபுரம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் கோயில்கள் இருக்கின்றன. இருப்பினும் விழுப்புரம் கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோயில்தான் மிகவும் புகழ்பெற்றது.
ஐயாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர்.
மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu