கொசுப்புழு வளர்ப்பவர்களுக்கு அபராதம் : நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பைல் படம்
கொசுப்புழு வளர்ப்பவர்களுக்கு அபராதம் என குமாரபாளையம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் நகராட்சியில் 22 ஆயிரத்து 025 குடியிருப்புகள், 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நீரினால் பரவக்கூடிய நோய்களான வாந்தி, பேதி, காலரா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, போன்ற தொற்று நோய்களும் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்களான மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா, போன்றவற்றை தடுக்க குமாரபாளையம் நகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நகரில் 33 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் நீர் சேமித்து வைக்கப்படும் கலன்கள் ஆய்வு செய்து கொசுப்புழுக்கள் தேங்காவண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க, 40 டெங்கு பணியாளர்கள் நியமித்து அபேட் கொசுப்புழு தடுப்பு மருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஊற்றும் பணி நடந்து வருகிறது.
இந்நகரில் வணிக நிறுவனங்களான தொழிற்கூடங்கள், பட்டறை, டயர் கடை, பஞ்சர் கடை, உணவு விடுதி போன்றவற்றை ஆய்வு செய்து ஆங்காங்கே பயனற்ற நிலையில் உள்ள டயர்கள், டியூப், வீணான பாத்திரங்கள், நெகிழி, சிமெண்ட் தொட்டி, தேங்காய் சிரட்டை, வாளி போன்றவற்றை பணியாளர்களால் ஆய்வு செய்து அவற்றை லாரி மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
தற்போது ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் 33 வார்டுகளில் குப்பை கூளங்கள், பயனற்ற நிலையில் இருக்கும் கழிவுப்பொருட்கள், சாக்கடை, கல், மண், செடிகள், முட்புதர்கள் அகற்றப்பட்டு மாஸ் கிளீன் செய்யப்பட்டு வருகிறது. தினசரி காலை, மாலை வேளையில் வார்டுகளில் முதிர் கொசுக்களை அழிக்க புகை தெளிப்பான் கருவிகள் கொண்டு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு ஆய்வர்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிக்க பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். வீடுகளில் உள்ள பயனற்ற கழிவுப்பொருட்களை நகராட்சி பணியாளர்களிடம் அவசியம் கொடுக்கப்பட வேண்டும். சேமித்து வைக்கப்படும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வீட்டில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் 500 ரூபாய் அபராதமும், வணிக நிறுவனங்களில் கண்டறியப்பட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, இதர பொது சுகாதார சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu