கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குவாரி : சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள கல் குவாரியை ஆட்சியர் ஆய்வு செய்தார்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கல் குவாரி அமைத்து முறைகேடாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வீராட்சி பாளையம் பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் ஊத்து பெருமாள் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த நிலம் மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு கோயிலை பராமரிப்பதற்காக அறங்காவலர் குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிலத்தை கடந்த 1974 ஆம் வருடம் முதல் 1994 ஆம் வருடம் வரை சுமார் 20 ஆண்டுகளுக்கு குவாரி அமைக்க வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில் குவாரி நடத்திய தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்தும் நிலத்தில் மீண்டும் விலை உயர்ந்த கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்கள் வெளியேறிய நிலையில் குழிகளை மூடாமல் விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதனால் அந்த குழியில் சுமார் 150 அடி உயரத்திற்கு 100 அடி அளவில் தண்ணீர் உள்ளது அதன் காரணமாக அங்கு மீன்பிடிக்கவும் நீச்சல் பழகவும் வரும் இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து வருகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்த ஒப்பந்தம் எடுத்த தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் அந்த கல்குவாரி குழியினை மூட வலியுறுத்தியும் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட கல் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதன் பேரில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார். அதனை அடுத்து நிலங்கள் ஏதாவது ஆக்கரமிப்பில் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்து கொண்டனர். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டதாகவும் விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர். இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் ஒருவரான செல்வகுமார் தெரிவிக்கும் போது கல்குவாரி விதிமுறைகளை மீறி இயங்கியுள்ளது. அவற்றை முறையாக பராமரிக்காத கல்குவாரி உரிமையாளர்கள் மீதும் தற்பொழுது கல்குவாரியில் நிரம்பியுள்ள நீரை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu