அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுவிழா

அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக்  கல்லூரியில்  ஆண்டுவிழா
X

குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற 43வது ஆண்டுவிழாவில் பேசிய குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் 43வது ஆண்டுவிழா கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது

குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் 43வது ஆண்டுவிழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் 43வது ஆண்டுவிழா கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவன உரிமையாளர்களுமான உடுமலைப்பேட்டை பாலசுப்ரமணியம், ராசிபுரம் சுவாமிநாதன், குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகிகள் புருஷோத்தமன், ஈஸ்வர் பரிசு வழங்கினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

பாலிடெக்னிக் கல்லூரி படிப்புகள் அதன் பயன்கள் குறித்து மூத்த ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் சேர வேண்டும்; பெண்களுக்கு பாலிடெக்னிக் படிப்புகள் ஒத்துவராது; பாலிடெக்னிக் என்றாலே இயந்திரம் சம்பந்தப்பட்ட படிப்புதான் என்கிற சராசரிச் சிந்தனை (stereotype) இன்றும் நிலவுகிறது. அது முற்றிலும் தவறு.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பணி வாழ்க்கையைத் திட்டமிட்டுப் படிக்க நினைப்பவர்களுக்கு உகந்தவை பாலிடெக்னிக் எனப்படும் தொழில் சார்ந்த படிப்புகள். அதேபோல நிச்சயமாகப் பெண்கள் பாலிடெக்னிக் படித்து ஜொலிக்க முடியும். அது மட்டுமல்லாமல் இயந்திரம் (மெக்கானிக்கல்) தவிரவும் ஏகப்பட்ட படிப்புகள் இதில் உள்ளன.

பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு மேலும் இரண்டாண்டுகள் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து அதன் பின்னர் கல்லூரியில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் படித்து வேலைக்குச் செல்வது ஒரு வகை. ஆனால் பாலிடெக்னிக் படிப்பை முடித்தவுடன் வேலைக்கு உத்தரவாதம் உண்டு. அதே வேளையில் நீங்கள் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டால் நேரடியாகப் பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம்.

சொல்லப்போனால், பொறியியல் படிப்பை ஆழமாகக் கற்றுக் கொள்வதற்குச் சரியான அடித்தளம் அமைத்துக் கொடுப்பவை பாலிடெக்னிக் படிப்புகள்தான். இதைப் படிப்பதன் மூலம் உங்களுக்குப் பொறியியல் குறித்த செயல்முறை கல்வியும்; அடிப்படை அறிவும் கிடைக்கும். பல்கலைக்கழகங்கள் பொறியியலுக்குப் பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படைக் கருத்துகள் பாலிடெக்னிக் படிப்புகளிலேயே சொல்லித்தரப்படுகின்றன.

பிளஸ் 2-வை சராசரியாகப் படித்து முடித்த மாணவரைக் காட்டிலும் பாலிடெக்னிக் படித்த ஒரு மாணவருக்குத் தொழில்நுட்ப அறிவு நிச்சயம் கூடுதலாக இருக்கும். அதிலும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பும் (Diploma) பி.இ. பட்டமும் (Degree) உங்களிடம் இருந்து விட்டால் நிச்சயம் நல்ல சம்பளத்தோடு கூடிய வேலையும் பதவி உயர்வும் நிச்சயம்.

படிக்கும் போதே சிறந்த செயல் முறை கல்வி, அதனை அடுத்து மேற்படிப்பு படித்தால் ஆறு ஆண்டுகளில் பட்டயச் சான்றிதழ், படித்து முடித்தவுடன் வேலை, உங்களுடைய துறையில் அனுபவ அறிவு - இப்படி ஏகப்பட்ட அனுகூலங்கள் மிக்கது பாலிடெக்னிக் படிப்பு. இதில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுத்தால் எப்படியான பணி வாழ்க்கை அமையும் என்பதைப் பார்ப்போம்.

மூன்றாண்டு காலப் பட்டயப் படிப்பான சிவில் பொறியியல் (Diploma in Civil Engineering) படித்தவர்களுக்குப் பொதுச் சுகாதாரத் துறை, நீர்ப்பாசனத் துறை, சாலை மற்றும் கட்டிடத் துறை, ரயில்வே துறை, தண்ணீர் விநியோகத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலை கிடைக்கும். கணக்கெடுப்பு வேலை, காண்டிராக்டர் வேலைக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது தவிர மேலாளர், மூத்த பொறியாளர், நிறுவனப் பொது மேலாளர் ஆகிய பதவிகளும் கிடைக்கலாம்.

எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனி கேஷன் பட்டயப் படிப்பு (Diploma in Electronics and Communication) படித்தால் காட்சி ஊடகங்களில் தொழில்நுட்ப வல்லுநர் ஆகலாம். தொலைக்காட்சிப் பெட்டி பழுதுபார்க்கும் வேலை, எல்க்டிரானிக் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும்.

ஐடியா செலுலார், டாடா கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.என்.எல். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டயப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு முதலிடம் தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் சர்வீஸ் பொறியாளர், சோதனை பொறியாளர், புராடக்ட் பொறியாளர் (product engineer), துறை மேலாளர் ஆகிய வேலைகளில் சேரலாம்.

கணினிப் பொறியாளர் பட்டயப் படிப்பைப் படித்தால் கணினிப் பராமரிப்பு, மென்பொருள் மேம்பாடு, கணினிப் பயிற்சி, கணினி பழுதுபார்த்தல், கணினி விற்பனை ஆகிய வேலைக்குத் தகுதிபெறுகிறார்கள். இது போன்ற வேலைக்கு மென்பொருள் நிறுவனங்களில் உள்ளது.

ஆட்டோமொபைல் பொறியியல் பட்டயப் படிப்பு படித்தால் மாநில சாலைப் போக்குவரத்து துறை, மோட்டார் வாகன நிறுவனங்களின் ஷோரூம்கள், மோட்டார் வாகனங் கள் பழுதுபார்க்கும் இடங்கள் போன்றவற்றில் வேலை கிடைக்கும், மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் வேலை தருகிறார்கள்.

செராமிக் தொழில்நுட்பப் பட்டயப் படிப்பை (Ceramic Technology) படித்தவர்களுக்கு சிமெண்ட் தொழிற்சாலைகள், கண்ணாடி நிறுவனங்கள், செராமிக் தொழிற்சாலைகள், சுகாதாரம் தொடர்பான தயாரிப்புகளுக்கான தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்தால் சுரங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வேலைவாய்ப்புகள் உள்ளன. எஸ்.சி.சி.எல், என்.எம்.டி.சி. ஆகிய பிரிவுகளுக்குள் வரக்கூடிய பல நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.

ஜவுளி பொறியியல் பட்டயப் படிப்பு மூன்றரை ஆண்டு காலப் படிப்பு. ஜவுளி தொழிற்சாலைகளிலும், ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் இதைப் படித்தவர்கள் புராசஸ் பொறியாளராகச் சேரலாம். படிப்படியாகத் தொழில்நுட்பத் தரம் நிர்ணயிக்கும் பொறியாளர், தயாரிப்பு கட்டுப்பாடு மேற்பார்வையாளர் எனப் பதவி உயர்வும் பெறலாம். ஆக, பாலிடெக்னிக் படித்தவருக்குச் சென்ற இடமெல்லாம் வேலை. இவ்வாறு அவர் கூறினார்கள்.


Tags

Next Story
ai in future agriculture