குமாரபாளையத்தில் மழையால் தணிந்த கோடை வெப்பம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் நேற்று இரவு பெய்த மழை.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கோடை வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு 08:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெய்த மழையால், கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு, குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் ஸ்டாண்ட் கடைகளின் வழியாக ஓடியது. இதனால் கடை வியாபாரிகள் அவசர, அவசரமாக கடையை மூடினர். பலமுறை குழாய் அடைப்பு சரிசெய்ய சொல்லியும் சரி செய்யாததால், இந்த கழிவுநீர் கடைகளின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது, என வியாபாரிகள் புகார் கூறினார்.
குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர். குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. திருமண சீசன் என்பதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு தொடங்கிய கன மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல சிரமப்பட்டனர். சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu