குமாரபாளையத்தில் காவலர்கள் பற்றாக்குறை: குற்றவாளிகளைப் பிடிப்பதில் தொய்வு

பைல் படம்
குமாரபாளையத்தில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக குற்றங்களை தடுப்பதிலும் குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் சங்கர் சிமெண்ட் ஆலை அடுத்த நான்கு வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம், ஆகியவை எல்லையாக உள்ளது. மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள், ஐநூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம் கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் காவல் நிலையத்தின் எல்கை விரிவடைந்து கிடக்கிறது.
குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய மூன்று ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், மூன்று ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் காவல் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், காவல் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன ஒட்டி, புறவழிச்சாலையில் இரு போலீஸார், காவல்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், குறைந்த பட்சம் இரு போலீஸார் தேவை. சமீப காலமாக இந்த அத்தியாவசிய பணிகளில் போலீஸார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் காவல்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் இரு போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.
பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீஸார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போலீஸ் எண்ணிக்கை பார்த்தால் சுமார் நாற்பது பேர் இருப்பதாகக்கூறப்படுகிறது. ஆனால் அதிக பட்சம் ஐந்து பேருக்கு மேல் இருப்பது இல்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நகரின் பாதுகாப்புக்கு காவல் நிலையம் மிகவும் அவசியம். அவர்கள் போதுமான எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே, குற்ற சம்பவங்கள் குறையும். போதுமான காவலர்கள் இல்லை என்பது, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தெரியவந்துள்ளதால், மிகவும் துணிச்சலாக நகை பறிப்பு, பணம் பறிப்பு, வாகன திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, எளிதாக தப்பி விடுகின்றனர்.
நூறு பவுன் திருட்டு உள்ளிட்ட பெரும்பாலான திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளையும் திருட்டுப்போன பொருள்களையும் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நகரில் போலீஸ் நடமாட்டம் இருக்கும் வகையில் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாற்பது பேரின் பணிகளை நான்கு பேர் மட்டும் எவ்வளவு நாட்கள் செய்ய முடியும் என்பது மாபெரும் கேள்வி. இதில் அடிக்கடி நாமக்கல் மாவட்ட காவல் தலைமை அலுவலகத்தில் கூட்டம், பழைய வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற பணிகள் என ஆய்வாளருக்கும் பணிகள் சரியாக உள்ளது. இரவு நேர பணிக்கு ஒரு நாள் விட்டு ஒருவர் என இருக்கும் ஐந்து பேர் மட்டும் மாறி, மாறி பார்க்கும் நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு போலீஸார் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu