அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

குமாரபாளையம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பேசினார்
குமாரபாளையம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை சிவகாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வசந்தகுமாரி தலைமை வகித்தனர்.
மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தின் மூலம், பள்ளிக்கு தேவையான கருத்துகளை ஏற்றுக்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். கூட்டத்தில் பங்கேற்ற இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பேசியதாவது::இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு பயந்து கொண்டு விடுமுறை எடுத்துக் கொண்டனர். தேர்வு அச்சத்தை நீக்கி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு வராத மாணவிகள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக பேசி மாணவிகளை தேர்வு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டோம். மேலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று மாணவிகளை ஊக்கப்படுத்தி தேர்வு எழுதி வைக்க அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி நாளை முதல் அவர்கள் வீட்டுக்கு சென்று தேர்வு எழுத அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். இதில் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பெற்றோர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்.எம்.சி) மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி, 'அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் செயல்பட்டில் இல்லை. ஆகையால் தற்போது மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது..
இதன்படி, ஆறு முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து, தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியப் பணியாகும்.பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பும் பங்களிப்பும் இந்த குழுவிற்கு உள்ளது.
பள்ளி நிர்வாகம் என்பது தலைமையாசிரியருக்கு மட்டும்தான் என்கிற நிலை இல்லாமல் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் பங்களிப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.குறிப்பாக, அரசுப் பள்ளிகள் நிர்வாகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், உள்ளூர் மக்கள் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் போது, அந்த பள்ளிகள் இன்னும் மேம்படும் வகையில் இந்த குழு செயல்படும்.
மேலும், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும் இது செயல்படும். பாதுகாப்பான குழந்தை நேயச்சூழலை பள்ளிகளிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் முயற்சியை பள்ளி மேலாண்மைக் குழு முன்னெடுக்கும்.
மாற்றுத்திறனாளிகள், குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் கல்வியைத் தொடரும் வகையிலான வசதிகளை பள்ளியில் செய்து தருதல்.பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாட நூல் உள்ளிட்ட திட்டங்கள் முழுமையாகவும் சரியாகவும் மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணித்து, உறுதிப்படுத்தல்.
பள்ளி மேலாண்மைக் குழு அந்த பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவர் தலைவராக இருப்பார். மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர் துணைத்தலைவராக இருப்பார்.இதில், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10க்கும் குறையாத எண்ணிக்கையில் பெண்கள் இருக்க வேண்டும்.
இந்த குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது பள்ளிக்கு வருகை தந்து பார்வையிட வேண்டும். மாதம் ஒரு முறை சந்தித்து, ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த அரசு உதவி, தன்னார்வலர்களின் உதவி, தங்களின் பங்களிப்பு என முயற்சிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.பள்ளி மேலாண்மை குழுவின் கூட்ட நிகழ்வுகள், தீர்மானங்கள் குறித்து தனி பதிவேடுகளை பராமரிக்கப்பட வேண்டும். இரண்டு ஆண்களுக்கு ஒரு முறை குழு மாற்றியமைக்கபட வேண்டும்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு பெற்றோர்கள் நின்று விடக்கூடாது. ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெறும் வகையில், தரமான கல்வி, உள் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் பெற்றோர்களும் பங்கெடுக்க வேண்டும். ஆசிரியர்களோடு இணக்கமான உறவைத் தொடர வேண்டும். அரசுப் பள்ளிகளை பெருமையின் அடையாளங்களாக மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்களது பங்களிப்பை தரவேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை பள்ளி மேலாண்மைக் குழு செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தரமான கல்விக்கு திட்டமிடல், அதை செயல்படுத்துதல், செயல்பாட்டை மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றிற்கு இச்செயலி மிகவும் உதவியாக இருக்கும். பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த கலைப் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu