மக்கள் தொடர்பு முகாமுக்காக முன் மனுக்கள் வழங்கிய பொதுமக்கள்

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் . கவுசல்யா தலைமையில் நடைபெற்ற முகாமில் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்
குமாரபாளையம் தாலுக்கா மோடமங்கலத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு நடத்தப்பட்ட முன் மனுக்கள் பெறும் முகாமில் திரளான பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமையில் ஏப். 12ல் மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. அதனையொட்டி மோடமங்கலம் ஈ.சேவை மையத்தில் தங்கள் குறைகள் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் முகாம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, ஒரே பட்டாவாக மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா, உட்பிரிவு பட்டா, புதிய ரேசன் கார்டுகள் பெற என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான 144 மனுக்களை கொடுத்தனர். இதில் வட்டாட்சியர் சண்முகவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கம், வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், மக்கள் தொடர்பு முகாம் திட்டம் 1969-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் ஒரு குழுவாக சென்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் இதர அரசு சேவைகளும் வழங்கப்பட்டு வருவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
இம்முகாம்களை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்தும் வகையில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்),வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஆகியோர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை, மனுக்கள் தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அதன் மீதான இறுதி ஆணைகள் மக்கள் தொடர்பு முகாம் நாளன்று பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. அம்முகாம்களிலேயே முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள், வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் இதர அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu