விசைத்தறி உரிமையாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

விசைத்தறி உரிமையாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அடப்பு தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் போனஸ் பேச்சுவார்த்தை ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் பேச்சுவார்த்தையில் 0.15 சதம் சேர்த்து வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2020..2021ம் ஆண்டிற்கு 20 சதவீத போனஸ், கூலி உயர்வு கேட்டு ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் தாசில்தாருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அதன்படி முத்தரப்பு பேச்சுவார்த்தை தாசில்தார் தமிழரசி தலைமையில் சில நாட்கள் முன்பு நடைபெற்றது. ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். இதையடுத்து கொங்கு விசைத்தறி உரிமையாளர் சங்க கட்டிடத்தில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு ஏற்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு ஏற்படாமல் ஜன. 12க்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று 4ம் கட்டமாக தாலுக்கா அலுவலகத்தில் ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நடைமுறையில் உள்ள போனஸ் தொகையிலிருந்து 0.15 சதவீதம் அதிகப்படுத்தி தருவதாக அடப்பு தறி உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், கொரோனா பாதிப்பால் தொழில் நிலை சரியில்லாததால் அடப்பு தறி உரிமையாளர்கள் 8:00 சதவீதம் மட்டும் தர முடியும் என்று கூறினர். நாங்கள் 20 சதவீத போனஸ் தொடங்கி 8.33 சதவீதம்வரை கேட்டோம். அவர்கள் மறுத்தார்கள். மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. 4ம் கட்டமாக தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடைமுறையில் உள்ள போனஸ் தொகையிலிருந்து 0.15 சதவீதம் அதிகப்படுத்தி தருவதாக அடப்பு தறி உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது என தெரிவித்தார்.

கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறுகையில், தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். கொரோனா பாதிப்பால் அவ்வளவு தர முடியாது என்றும், எல்லோரும் கேட்பதால், நாங்களும் கலந்து ஆலோசித்து 8:00 சதவீதம் மட்டும் கொடுக்க முன் வந்தோம். அவர்கள் சேர்த்து கேட்டார்கள். தாசில்தாரும் முடிவு செய்து கொண்டு சிறிது சேர்த்து கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறி, பேச்சுவார்த்தையை ஜன. 12க்கு ஒத்தி வைத்தார். இந்த 4ம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 0.15 சதவீதம் உயர்த்தி தருவதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, கோவிந்தராஜ், சரவணன், வெங்கடேசன், பொன் கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர். அடப்பு தறி உரிமையாளர்கள் சார்பில் குமாரசாமி, சுந்தர்ராஜன், ராஜேந்திரன், பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!