குமாரபாளையத்தில் கோவில் திருவிழா அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் புகார் கூறிய தரப்பினர், எதிர் தரப்பினர் பங்கேற்றனர். ஒரு தரப்பினர் சுவாமியை சப்பரத்தில் வைத்து, குறிப்பிட்ட நபரின் டிராக்டரில் தான் வைக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர் தரப்பினர் மறுத்தனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருவிழா நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி, ஆர்.ஐ. விஜய். வி.ஏ.ஓ. செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பேர் பங்கேற்பது வழக்கம். தீர்த்தகுட ஊர்வலம் காவிரி ஆற்றிலிருந்து வருகையில் பம்பை, மேளங்கள், யானை, ஒட்டகங்கள், குதிரைகள் வருவதை வேடிக்கை பார்க்க பெருமளவிலான கூட்டம் திரளும். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மஞ்சள் ஆடை அணிந்து தீர்தக்குடங்கள் எடுத்து வருவார்கள். சிலர் அக்னி சட்டிகள் கைகளில் ஏந்தி வருவார்கள். பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற விமான அலகு குத்தியவாறு அந்தரத்தில் பறந்தபடி வருவார்கள். ஆடு, கோழி பலியிட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
இதில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளும், தெருக்கூத்து, நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்சிகளும் நடைபெறுவது வழக்கம். குழந்தைகள் மிகவும் எதிர்பார்க்கும் திருவிழா இது. மிகுந்த ஆர்வத்துடன் ராட்டினங்களில் சுற்றி வர விருப்பம் கொள்வார்கள். வேண்டுதல் நிறைவேற்ற கோவிலுக்கு படைக்கப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கோவில் சார்பில் ஏலம் விடப்படும். அம்மனே கொடுப்பதாக எண்ணி, இதனை இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒன்றாவது வாங்கி செல்வது வழக்கம்.
உறவினர்கள் ஒன்று கூடி சாப்பிட்டு கொண்டாடும் திருவிழா எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. இந்நிலையில்தான் இந்த கோவிலில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு திருவிழா நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு ஒரு தரப்பினர் திருவிழா நடத்தி முடித்த பின், சில நாட்களுக்கு பின் மீண்டும் மற்றொரு தரப்பினர் திருவிழா கொண்டாடினர். இந்த ஆண்டு இரு தரப்பினரும் திருவிழா நடத்த விடாமல், அமைதி பேச்சுவார்த்தை நடத்துமளவிற்கு வந்து விட்டது.
இதில் பழனிசாமி என்பவர் டிராக்டரில்தான் சப்பரத்தில் வைக்கப்படும் அம்மன், வைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு சிதம்பரம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu