மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர்…

மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர்…
X

தொழிலாளி கந்தசாமிக்கு காவல் ஆய்வாளர் சந்திரகுமார் செயற்கை கால் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கி உதவிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் வசிப்பவர் கூலி தொழிலாளி கந்தசாமி. 58 வயதான இவர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவரது வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்தார்.

இது பற்றி பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமாரிடம் மனித நேயம் உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி சின்னசாமி, ஆனந்த் ஆகியோர் கூறினர். இதைத் தொடர்ந்து, கந்தசாமிக்கு உதவி செய்வதாக கூறிய காவல் ஆய்வாளர் சந்திரகுமார் உடனடியாக செயற்கை கால் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கந்தசாமிக்கு கொடுத்து உதவி செய்தார். மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு செயற்கை கால் வழங்கி உதவிய பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்களால் 'கதம்' என்ற பெயரில் இந்தியாவின் முதல் பன்மைய செயற்கை முழங்கால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 'கதம்' என்பது ஒரு பன்மைய செயற்கை முழங்கால். விபத்தினால் முழங்காலின் மேல்பகுதி வரை இழந்தவர்கள் எளிதாக நடப்பதற்கு உதவும்.

இந்தத் தயாரிப்பு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். தற்போது புழக்கத்தில் இருக்கும் செயற்கை கால்களை, நம் நாட்டினர் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், அவற்றைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பலரும் சில அசெளகர்யங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், இந்திய மக்களின் தேவைகளை மனதில் வைத்து, மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, உருவாக்கப்பட்டதுதான் 'கதம்'.

தற்போது, கதம் வகையான செயற்கைகால் தொழிலாளி கந்தசாமிக்கு, பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் உதவியால் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகாலைப் பயன்படுத்துவோர், வண்டி ஓட்டுவது, தரையில் உட்காருவது, 160 டிகிரியில் காலை மடக்குவது, பிறர் துணையின்றி பொதுப்போக்குவரத்தை மேற்கொள்வது உள்ளிட்ட வழக்கமான வேலைகளைச் சிரமமின்றி செய்யலாம் என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!