மொபைலில் நூதன போலி லாட்டரி விற்பனை: 5 பேர் கைது
லாட்டரி விற்பனை செய்து கைது செய்யப்பட்ட 5 பேர்.
குமாரபாளையத்தில் மொபைல் மூலம் நூதன போலி லாட்டரி விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, கவுரி மெஸ் அருகே சரக்கு வாகனத்தில் மொபைல் மூலம் பொதுமக்களிடம் சில எண்களை காட்டி போலி லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் உட்கார்ந்தவாறு 5 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் குமாரபாளையம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவகுமார், 46, விக்னேஷ், 27, ராஜசேகரன், 47, பிரபு, ௩௮, துரைராஜ், 39, என்பது தெரியவந்தது. கையும், களவுமாக பிடிபட்ட 5 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 மொபைல் போன், 7 ஏ.டி.எம்.கார்டுகள், ஒரு டாடா ஏ.சி. சரக்கு வாகனம், ரூபாய் ஆயிரத்து 640 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தம்பதி மேல் குடிபோதையில் டூவேலரில் மோதிய வடமாநில இளைஞர்
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி செல்லும் சர்வீஸ் சாலையில், அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டு கத்தேரி பிரிவு நோக்கி இளம் தம்பதியர் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின்புறமாக டூவீலரில் வேகமாக வந்த வடமாநில இளைஞர் ஒருவர், இவர்கள் மீதி மோதிவிட்டு நிற்காமல் சென்றார். மேலும் கத்தேரி பிரிவு அருகே சாலையை கடக்க நின்று கொண்டிருந்த கார் மீதும் மோதி விட்டு கீழே போதையில் விழுந்தார். அங்குள்ள சிலர் அவனை பிடித்து உட்கார வைத்தனர். இதனை கண்ட பல வடமாநில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அவனை விடுவிக்க வேண்டும் என கூச்சல் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதனப் படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து பொதுநல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
இப்பவே வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்து வைத்ததிற்கு, பல வட மாநில இளைஞர்கள் ஒன்று கூடி வாதம் செய்து அழைத்து சென்று விட்டனர். இது காலப்போக்கில் அவர்கள் எண்ணிக்கை எதிகம் ஆனால் நாமெல்லாம் பேசாமல் இருக்கும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடையாளம் தெரிந்த மூதாட்டியின் சடலம்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் அருகே செல்லும் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் இரு நாட்கள் முன்பு மூதாட்டியின் சடலம் மிதந்து வந்தது. இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சடலத்தை மீட்டனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று அவரது அடையாளம் தெரிந்தது. இவர் தேவூர் பகுதியை சேர்ந்த ராஜம்மாள், 67, என தெரிய வந்ததையடுத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் இருந்த சடலத்தை ஒப்படைத்தனர்.
தவற விட்ட பணம், மொபைல் போனை போலீசிடம் ஒப்படைத்த கூலி தொழிலாளி
குமாரபாளையம் பவர் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் பழனிவேல், 35. கூலித்தொழிலாளி. இவரும் இவரது நண்பர் ஒருவரும் நேற்று மாலை 12:30 மணியளவில் சேலம் சாலை பவர் ஹவுஸ் பகுதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, எதிரே வந்த டூவீலரில் இருந்து பை ஒன்று தவறி கீழே விழுந்தது. அதில் மொபைல் போன், பணம் இருந்ததால் அதனை உடனே குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவியிடம் ஒப்படைத்தனர். பையில் இருந்த பர்ஸ்ல் ஒரு போன் நம்பர் இருந்தது. அவருக்கு போன் செய்து ஸ்டேஷன் க்கு வரவழைத்து விசாரணை செய்ததில், வட்டமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அர்ஜுனன், 35, என்பது தெரியவந்தது. அவரிடம் அவருக்கு சொந்தமான மொபைல் போன், பணம் 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது. இதற்காக போலீசிடம் பையை ஒப்படைத்த பழனிவேலுவுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் அர்ஜுனன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பள்ளி வேன், சரக்கு வாகனம் மீது மோதி டிவைடரில் ஏறி நின்ற நிலை தடுமாறிய டேங்கர் லாரி
சேலம் மாவட்டம், வீரக்கல்புதூர், மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 35. டேங்கர் லாரி ஓட்டுனர். இவர் நேற்று மாலை 01:00 மணியளவில் பள்ளிபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது நிலை தடுமாறிய நிலையில் வந்த போது, பவானி தனியார் பள்ளி வேன் மீதும், டெம்போ ஸ்டாண்டில் நின்ற சரக்கு வாகனம் மீதும் மோதி வேகமாக வந்து பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இருந்த டிவைடர் மீது ஏறி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கம் வியாபாரிகள் அச்சமடைந்தனர். போலீசார் விசாரணையில் பிரேக் பழுது என தெரிய வந்தது.
அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது
மிலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகள் விடுமுறை விட்டதையடுத்து, நகரின் பல இடங்களில் மது அனுமதி இல்லாமல் விற்கப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பல இடங்களில் ஆய்வு செய்தனர். ஆனங்கூர் பிரிவு, அருவங்காடு ஹை டெக் பார்க் அருகில், வட்டமலை, எதிர்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு செய்ததில், ராஜா, 30, குமார், 42, காளீஸ்வரன், 26, இளங்கோ, 44, ஆகியோர் மது பாட்டில்கள் விற்றதாக வழக்குபதிவு செய்து 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஸ்கர், 29, என்பவரிடம் ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் இரண்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu