குமாரபாளையம் அருகே முனியப்பன் கோவில் தேர்த்திருவிழா
குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற செங்கமா முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். சில நாட்கள் முன்புதான் இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சுற்றுப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்த கோவில் திருவிழாவையொட்டி, காவேரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் முனியப்பன் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். வழிநெடுக பொதுமக்கள் இந்த ஊர்வலத்தை கண்டுகளித்து வணங்கினர்.
நேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இங்கு நடந்த தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் முனியப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தபடி வந்தார்.
கிணத்துப்பாளையம், குட்டிக்கிணத்தூர், ஆலந்தூர், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் திருவிழா கொடியேற்றி, காவல் தெய்வமான முனியப்பனை பல்லக்கில் வைத்து, தோளில் சுமந்தவாறு பல கிராமங்கள் வழியாக வலம் வந்தனர். கோவில் வளாகத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
திருவிழாவையொட்டி கரும்பு கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழாவிற்கு வருபவர்கள் திரும்ப வீட்டிற்கு செல்லும் போது கரும்பு வாங்கி செல்வது வழக்கம். குழந்தைகளுக்கு ராட்டினங்கள், விளையாட்டு பொருள் கடைகள், அழகு சாதன பொருட்கள் கடைகள் என பலதரப்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu