காணாமல் போன பள்ளி சமையல் பணியாளர்: கொலை செய்த மற்றொரு பணியாளரா?

காணாமல் போன பள்ளி சமையல் பணியாளர்: கொலை செய்த மற்றொரு பணியாளரா?
X
குமாரபாளையத்தில் அரசு பள்ளி சமையல் பணியாளர் பெண்ணை கொலை செய்தது, மற்றொரு பெண் சமையல் பணியாளரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் புத்தர் தெரு அரசு பள்ளியில் சமையல் பணியாளராக பணியாற்றி வந்தவர் மாதேஸ்வரி, 35. இவர் நவ. 24ல் தன்னுடன் பணியாற்றும் கவுரி காஞ்சனா என்பவர் வசம், வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. இதனையடுத்து அவரது மகள் கவிதா குமாரபாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 29ம் தேதி, இதே பள்ளியில் சமையல் வேலை செய்யும் கவுரி காஞ்சனா, 37 மற்றும் 14,13 வயதுள்ள இரண்டு மகள்கள், 7 வயது மகனுடன் மாயமானார். இது குறித்து இவரது தந்தை முருகன், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். சுமார் ஒரு மாதம் ஆகியும் இவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாமல் இருந்தது.

போலீசார் செய்த தீவிர விசாரணையில், மாதேஸ்வரி கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. இவர் பொதுமக்களிடம் தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு சேர்த்து, அதில் வரும் பணத்தை பொதுமக்களுக்கு கடனாக கொடுத்து வந்துள்ளார். இதனை கவுரி காஞ்சனாவும் கடன் வாங்கியதாகவும், இதுமட்டுமல்லாமல் பலருக்கும் இவர் கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே வெளியில் பலருக்கு வாங்கி கொடுத்த பணத்தை வசூல் செய்து, அதனை மாதேஸ்வரி வசம் கொடுக்கவில்லை இதனை அறிந்த மாதேஸ்வரி பணத்தை கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாதேஸ்வரியை, தன் மகளுடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி, வெப்படை எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். மாதேஸ்வரியின் சடலம் எங்கு உள்ளது என்பது குறித்து, இறுதி கட்ட விசாரணை செய்து வருவதால், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி