உலக அளவில் விளையாட தகுதிபெற்றும் வசதி இல்லாமல் தவிக்கும் குமாரபாளையம் மாணவி
குமாரபாளையம் மாணவி தபஷ்வினி
பெண்கள் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினர் மத்தியில் ஆவலும், எதிர்பார்ப்பும் இருந்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேசிய அளவில் பிஸ்ட்பால் என்று அழைக்கப்படும் கைமுட்டி பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவி சாதனை படைத்துள்ளார். அவர் ஜூலை மாதம் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளார். அண்ணல் அவரிடம் போதிய பண வசதி இல்லாமல் மாணவியின் திறமை வெளி உலகுக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.பெற்றோரும் மாணவியை உலக நாடுகளில் விளையாட வைக்க தவித்து வருகின்றனர்.
இது குறித்த செய்தி தொகுப்பினை பார்ப்போம்...
பெண் குழந்தைகள் கல்வி,விளையாட்டு என தொடர்ந்து அனைத்து துறைகளிலும் முதன்மை பெற்று சிறப்பாக வளர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க போதுமான திறமைகள் இருந்தும் பணம் அவர்களது கனவினை சிதைக்கும் கருவியாக இருக்கிறது. இதனால் திறமை இருந்தும் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
இதே போன்ற நிலைமை தான் நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்த மாணவிக்கு ஏற்பட்டுள்ளது.சக்திவேல் ராதிகா தம்பதிகளின் மூத்த மகள் தபஷ்வினி. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர், கடந்த 8ம் வகுப்பு படிக்கும் போதே, குண்டு எறிதலில் மாவட்ட அளவில் முதல் பிடித்து வந்துள்ளார். இதன் பின்னர் ஐரோப்பா நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியா நாட்டின் தேசிய விளையாட்டான பிஸ்ட்பால் என்று அழைக்கப்படும் கை முட்டி பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு, அதில் மாணவி தபஷ்வினி தீவிர பயிற்சி பெற்று வந்தார்.
இதன் பயனாக மாவட்ட அளவில் தொடங்கி மாவட்டம்,மண்டலம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்று தற்போது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது இந்தியாவின் சார்பில் உலக அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்ல 2 லட்சம் ரூபாய் பண வசதி இல்லாததால் விளையாட்டில் மாணவி பங்கேற்பது கேள்விக் குறியாகி உள்ளது.
மாணவியின் தந்தை சக்திவேல் தற்காலிக டிரைவராக இருந்து வருகிறார். எனவே, அவரது வருமானம் குடும்பத்திற்கே சரியாக சென்று விடும்.அவரால் மகளின் வெளி நாடு பயணத்திற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இது குறித்து மாணவி பெற்றோர் கூறும் போது,
கொரோனா கால கட்டத்தில் குடும்ப சூழலை சமாளிக்க முடியாத நிலையில் தங்களது பிள்ளையின் கனவை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்று மன வேதனையுடன் வெளிபடுத்தினர்.மாணவி தேர்வானவுடன், வெளி நாடு செல்லுவதற்கு முதல்கட்டமாக 50ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலுத்தி உள்ளதாக கூறிய பெற்றோர், தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உடைய தன்னார்வ அமைப்பினர், தன்னார்வலர் யாரேனும் முன் வந்து உதவினால் தங்களது மகளின் கனவு நனவாகுவதுடன் நிச்சயமாக விளையாட்டில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பேசிய மாணவி ஐரோப்பிய நாடுகளில் பிரதானமாக விளையாடும் பிஸ்ட்பால் போட்டியில் பல்வேறு உடல் நலம் சார்ந்த நன்மைகள் இருப்பதாகவும்,கைப்பந்து விளையாட்டு மாதிரியை கொண்ட பிஸ்ட்பால் விளையாட்டில் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே விளையாட முடியும் என்றார். உலக அளவில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பங்கேற்க உள்ளோம். அதில் நானும் ஒருவர். இதே போன்று கேரளா,தெலுங்கானா,ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த மாணவிகளும் தன்னுடன் தேர்வாகி உள்ளதாக மாணவி தபஷ்வினி கூறினார்.
தற்போது தனது பெற்றோர் தன்னை உலக அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்புவதற்கு சந்திக்கும் சிரமங்கள் தன்னை வேதனையடைய செய்து உள்ளது என்று கூறிய அவர், தனக்கு உரிய உதவி கிடைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.
.ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி தான் எட்டா கனியாக இருந்து வந்தது. தற்போது விளையாட்டும் எட்டாத படிகற்களாக போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை தடுக்க அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu