குமாரபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து நகை, பணம் கொள்ளை
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு பூஜைகள் முடிந்து, பூசாரி வேலுமணி, 47, கோவிலை பூட்டிச் சென்றார். இரவு காவலாளியாக ராஜன், 43, பணியாற்றி வருகிறார்.
தினமும் இரவில் கோவில் வளாகத்தில் மடப்பள்ளி அருகே தூங்குவது வழக்கம். நேற்றுமுன்தினம் இவர் வழக்கம்போல் கோவில் பூட்டியபின் தூங்கியுள்ளார். நேற்று விடியற்காலை 04:00 மணியளவில் எழுந்து பார்த்த போது, அருகில் வைத்திருந்த மொபைல் போன் காணவில்லை. அதன்பின் கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கபட்டிருந்த இரு உண்டியலில் ஒரு உண்டியலின் பூட்டு மட்டும் உடைக்கபட்டு, அதில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் மற்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மாசித்திதிருவிழாவிற்கு முன்னர்தான் இந்த உண்டியல் தொகை கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவில் நிறைய பணம், நகை சேர்ந்திருக்கும் என எண்ணி, மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். திருடப்பட்டதாக கூறப்படும் தொகை சுமார் இரண்டு லட்சம் மற்றும் 5 பவுன் தங்க நகை என கூறப்படுகிறது.
இதே பகுதியில் உள்ள ஓட்டல் அருகே உள்ள வீட்டில் மூன்று மாதங்கள் முன்பு 100 சவரன் நகை, ரொக்கம் 2 லட்சம் ஆகியன துக்க காரியத்திற்கு சென்று வருவதற்குள் திருடப்பட்டன.
இது குறித்து கோட்டைமேடு ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் கூறியதாவது:
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இது கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், குமாரபாளையம் குடியிருப்பு பகுதிகள், மக்கள் தொகைக்கு ஏற்ப, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், போதிய போலீசார் இல்லாதது, அனைத்து சமூக விரோதிகளும் அறிந்து வைத்துள்ளனர். எப்போது சென்றாலும் ஒரு போலீஸ், இரண்டு போலீசார் மட்டுமே உள்ளனர். கேட்டால், பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.
கோட்டைமேடு பகுதியில்தான் போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது. ஆனால் எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதிக வாகனங்கள் கடக்கும் கத்தேரி புறவழிச்சாலை பிரிவில் ஒரு போலீஸ் கூட நிற்பது இல்லை. இதனால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது. பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில், போலீசார் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 100 பவுன் திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், மற்றொரு சம்பவம் கோவிலில் நடந்துள்ளது. இதை தடுக்க தற்காலிகமாக தீவிர ரோந்து நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu