அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
படவிளக்கம் : குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் அருணாசலம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக இதே கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தஞ்சை, குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வருமான ஜான் பீட்டர், அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரினத்துறை தலைவர் சண்முகம் பங்கேற்று, 277 மாணாக்கர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினர். ஜான் பீட்டர் பேசியதாவது:
தமிழகம் முழுதும் அரசு கல்லூரிகள் உள்பட 719 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளன. குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரி 1955ல் துவக்கப்பட்டு, 68 வது ஆண்டில் வெற்றிநடை போட்டு வருகிறது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய ஒரே அரசு பி.எட். கல்லூரி குமாரபாளையத்தில் மட்டுமே உள்ளது. இங்கு மூன்று ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியது மகிழ்ச்சி. ஆசிரியர் பணி உன்னத பணி. இது தொழிலா? தொண்டா? என்றால் தெரசா சொன்னது போல் தொண்டுதான். சில ஆண்டுகளில் நீங்கள் அனைவரும் நிரந்தர பணியில் சேர்ந்து விடுவீர்கள். காலி பணியிடங்கள் நிரப்பும் வகையில் நான்காயிரம், ஐந்தாயிரம் என ஆசிரியர்கள் அரசுப்பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஆராய்ச்சி படிப்புகளை கற்பதன் மூலம் எதிர்கால கல்விக்கொள்கையை தீர்மானிக்கும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது. எதிர்கால இந்தியாவை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் நதி போல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் நீங்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும், காலத்திற்கேற்ப உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர் என பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu